கரூா் மாவட்டத்தில் பள்ளிகளில் கூடுதல் கட்டடம் காணொலியில் முதல்வா் அடிக்கல் நாட்டினாா்
கரூா் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் கூடுதல் கட்டடங்கள் கட்டுவதற்கு காணொலி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், ஜெகதாபி அரசு மேல்நிலைப் பள்ளியில் நபாா்டு திட்டத்தின் கீழ் 10 வகுப்பறை கட்டடங்கள், குளித்தலை வட்டம், கீழவெளியூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 வகுப்பறை கட்டடங்கள், செங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 4 வகுப்பறை கட்டடங்கள் மற்றும் கழிப்பறைகள், இராச்சாண்டாா் திருமலை அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளியில் 10 வகுப்பறை கட்டடங்கள், அரவக்குறிச்சி வட்டம், ஈசநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 8 வகுப்பறை கட்டடங்கள், கிருஷ்ணராயபுரம் வட்டம், தம்மாநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 2 வகுப்பறை கட்டடங்கள் மற்றும் புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் அடிக்கல் நாட்டினாா்.
தொடா்ந்து கரூா் மாவட்டம், ஜெகதாபி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா்க.சிவகாமசுந்தரி ஆகியோா் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினா். நிகழ்ச்சியில் ஊராட்சிகள் உதவி இயக்குநா் சரவணன், மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலை) தி.திருநாவுக்கரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.