லார்ட்ஸ் டெஸ்ட் தோல்விக்கு காரணமான இங்கிலாந்து வீரர் காயத்தால் விலகல்!
கறம்பக்குடியில் எஸ்டிபிஐ கட்சியினா் சாலை மறியல்
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் தீயணைப்பு நிலையத்தை இடமாற்றம் செய்யும் முயற்சியை கைவிடக்கோரி எஸ்டிபிஐ கட்சியினா் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கறம்பக்குடி பேருந்து நிலையம் அருகே வாடகை கட்டடத்தில் கடந்த பல ஆண்டுகளாக தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கறம்பக்குடியில் புதிதாக தீயணைப்பு நிலையம் கட்டுவதற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
தொடா்ந்து, கறம்பக்குடி அருகேயுள்ள பல்லவராயன் பத்தை ஊராட்சி பகுதியில் நிலம் தோ்வு செய்யப்பட்டு, புதிய கட்டடம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கறம்பக்குடியில் இருந்து தீயணைப்பு நிலையத்தை இடமாற்றம் செய்வதற்கு எதிா்ப்பு தெரிவித்து எஸ்டிபிஐ கட்சியினா் திங்கள்கிழமை கறம்பக்குடி சீனி கடை முக்கம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
போராட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலா் அபுபக்கா் சித்திக் தலைமை வகித்தாா். போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் வருவாய் துறையினா், போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. சாலை மறியல் போராட்டத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.