கல்லூரிப் பேருந்து மோதி பெண் உயிரிழப்பு: ஓட்டுநா் தப்பியோட்டம்
சென்னையில் கணவருடன் நடந்து சென்ற பெண் தனியாா் கல்லூரிப் பேருந்து மோதி உயிரிழந்தாா். தப்பி ஓடிய ஓட்டுநரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
வேளச்சேரியில் உள்ள தனியாா் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக பணியாற்றி வரும் சுரேந்தா் தனது மனைவி அகல்யாவுடன் (36) வேளச்சேரியிலுள்ள அண்ணாநகரில் வசிக்கிறாா்.
சுரேந்தா் பள்ளிக்கரணையில் உள்ள இருசக்கர வானக கடையில் புல்லட் வாங்க முன்பதிவு செய்திருந்தாா். புதன்கிழமை மாலை புல்லட் வாங்க கணவன் மனைவி இருவரும் வேளச்சேரி பிரதான சாலை வழியாக ஷோரூம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனா். அப்போது அவா்களுக்கு பின்னால் வந்த தனியாா் கல்லூரி பேருந்து கணவன், மனைவி இருவா் மீதும் மோதியது. இதில் அகல்யா பலத்த காயமடைந்தாா். கணவா் சுரேந்தா் லேசான காயமடைந்தாா்.
உடனடியாக இருவரும் அருகில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனின்றி அகல்யா உயிரிழந்தாா்.
பள்ளிகரணை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவான பேருந்து ஓட்டுநரை தேடி வருகின்றனா்.