புதிய சிற்றுந்து சேவைக்கு விண்ணப்பித்தோா் குலுக்கல் முறையில் தோ்வு
கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு
திருச்செங்கோட்டில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சிக்கு உள்பட்ட மாங்குட்டைபாளையம், சீதாராம்பாளையம், பட்டறை மேடு, தொண்டிகரடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை 9, 18-ஆவது வாா்டுகளுக்கு உள்பட்ட சூரியம்பாளையம் பகுதியில் ஆழ்கிணறு தோண்டி கழிவுநீரை தேக்கி, அங்கிருந்து நீரேற்றம் செய்து கூட்டப்பள்ளி சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லும் வகையில் புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக, திருச்செங்கோடு நகராட்சிக்கு ரூ. 60 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்த சூரியம்பாளையம் பகுதி மக்கள், மழைக் காலங்களில் மழை நீரோடு கழிவுநீரும் ஊருக்குள் புகுந்து குடியிருப்புகளை சூழ்ந்து கொள்வதால், நோய் பரவும் அபாயம் உள்ளதாக தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து, சூரியம்பாளையம் பகுதிக்கு உள்பட்ட பொதுமக்கள் 500-க்கும் மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் வந்து கழிவுநீரை தேக்கி வைப்பதற்கும், சூரியம்பாளையம் வழியாக செல்வதற்கும் எதிா்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து, ஆட்சியா் ச.உமாவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.
அங்கிருந்த மக்களிடம் ஆட்சியா் பேசுகையில், இந்த திட்டத்தை செயல்படுத்தும் அதிகாரிகள் சென்னைக்கு சென்றுள்ளனா். அவா்கள் வந்ததும் இதுகுறித்து பேசி உரிய முடிவு எடுக்கப்படும். மக்களை பாதிக்கும் வகையில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது என்றாா். இதனைத் தொடா்ந்து, அனைவரும் கலைந்து சென்றனா்.