ரிதன்யா தற்கொலை வழக்கு: வேறு அதிகாரி விசாரிக்க கோரி தந்தை மனு
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலை மெழுகு அச்சு எடுத்ததாகப் புகார்!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலையை, மெழுகு அச்சு எடுத்ததாக எழுந்த புகார் தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் ஏகாம்பரநாதர் கோயிலில் விசாரணை நடத்தினர்.
மெழுது அச்சு எடுக்கப்பட்டது ஏன் என்பது குறித்து, ஏழு மணி நேரம் அர்ச்சகர்கள், ஊழியர்கள், புகார்தாரர் மற்றும் உபயதாரர் உள்ளிட்டோரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் தற்போது குடமுழுக்குக்காக திருப்பணிகள் பல கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் தினேஷ் மற்றும் டில்லிப் பாபு ஆகியோர் மாவட்ட ஆட்சியர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்டோருக்கு புகார் மனு அளித்தனர்.
அதில் ஏகாம்பரநாதர் திருக்கோயில் மூலவர் பின்புறம் உள்ள சோமாஸ்கந்தர் கல் சிலையை சிலர் திடீரென மெழுகு அச்சு எடுத்துச் சென்றதாகவும், இது குறித்து முறையான தகவல்கள் செயல் அலுவலர் உள்ளிட்டோர் தர மறுக்கின்றனர் என புகாரில் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி சம்பத் தலைமையிலான உதவி ஆய்வாளர்கள் பாபு அம்ப்ரோஸ் ஆனந்த் ஆகியோர் திருக்கோயில் அர்ச்சகர்கள், ஊழியர்கள், புகார்தாரர் மற்றும் உபயதாரர்கள் என பத்துக்கும் மேற்பட்டோரிடம் சனிக்கிழமை காலை 11 மணி முதல் நான்கு மணி வரை தீவிர விசாரணை மேற்கொண்டு அறிக்கையை பெற்றனர்.
இச்சம்பவம் கோயிலில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.