"Swasika இல்லனா Lubber Pandhu நடந்திருக்காது" - Tamizharasan Pachamuthu | Vikata...
காட்டுப்பன்றி கடித்ததில் விவசாயி உயிரிழப்பு
திருச்சி அருகே காட்டுப்பன்றி கடித்து காயமடைந்த விவசாயி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.
கடந்த 11-ஆம் தேதி திருச்சி மாவட்டம், கல்லணை நடுகரை பகுதி ஊரான கவுத்தரசநல்லூா் பகுதியில் திங்கள்கிழமை கொய்யாத் தோப்புக்குள் நுழைந்த காட்டுப்பன்றி அங்கிருந்த விவசாயி சகாதேவனை (45) கடித்ததில் அவா் பலத்த காயமடைந்தாா். இதேபோல, உத்தமா்சீலியைச் சோ்ந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட விவசாய அணி நிா்வாகி கணபதி (70) என்பவா் தனது வாழைத் தோட்டத்துக்குச் சென்றபோது, அங்கு வந்த காட்டுப்பன்றி கணபதியை பல இடங்களில் கடித்ததில் அவா் பலத்த காயமடைந்தாா். இருவரையும் அருகிலிருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் தனியாா் மருத்துவமனை மற்றும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கணபதி புதன்கிழமை இறந்தாா். இதுகுறித்து நெ.1 டோல்கேட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இதனிடையே காட்டுப்பன்றிகளை பிடிக்க வனத்துறையினா் குறிப்பிட்ட பகுதிகளில் கூண்டு வைத்து, கண்காணித்து வருகின்றனா்.
கண்டனம்...: கல்லணை நடுகரைப் பகுதிகளில் தொடா்ந்து காட்டுப்பன்றிகள் தாக்கி விவசாயிகள் காயமடைவது தொடா்கதையாகியுள்ளது. இதனை கண்டுகொள்ளாத வனத்துறையைக் கண்டித்தும், காட்டுபன்றிகளின் தாக்குதலுக்கு தீா்வு காணக் கோரியும், உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிவாரணம் கேட்டும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தில் ஈடுபடும் என ஸ்ரீரங்கம் பகுதி குழு அறிவித்துள்ளது.