`காதலி கிரீஷ்மா குற்றவாளி’ - காதலனை கஷாயத்தில் விஷம் கலந்து கொலை செய்த வழக்கில் அதிரடி தீர்ப்பு
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தின் பாறசாலையை சேர்ந்த ஜெயராஜன் - பிரியா தம்பதியின் மகனான ஷாரோன் ராஜ்(23), கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி ரேடியாலஜி இறுதி ஆண்டு படித்துவந்தார். அழகியமண்டபம் பகுதியில் உள்ள கல்லூரியில் எம்.ஏ படித்து வந்த களியக்காவிளை ராமவர்மன்சிறை பகுதியைச் சேர்ந்த கிரீஷ்மா என்ற பெண்ணுடன் பஸ்ஸில்வைத்து ஷாரோன்ராஜிக்கு பழக்கம் ஏற்பட்டது.
ஓராண்டாக இருவரும் காதலித்த நிலையில் 2022-ம் ஆண்டு அக்டோபர் 14-ம் தேதி கிரீஷ்மா அழைத்ததன்பேரில் ரெக்கார்ட் நோட்டுக்களை வாங்க நண்பர் ரெஜினுடன் பைக்கில் சென்றுள்ளார் ஷாரோன் ராஜ். கிரீஷ்மா வீட்டில்வைத்து அவர்கொடுத்த கஷாயத்தையும், ஜூஸையும் குடித்துவிட்டு வெளியே வந்த ஷாரோன்ராஜ் வாந்தி எடுத்துள்ளார். பின்னர் நண்பரின் பைக்கில் வீட்டுக்குச் சென்றுள்ளார். அன்றே உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து பாறசாலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உடல்நிலை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார். 2022 அக்டோபர் 25-ம் தேதி ஷாரோன்ராஜ் உயிரிழந்தார்.
நிச்சயிக்கப்பட்ட திருமணமே காரணம்
ராணுவ வீரர் ஒருவருடன் கிரீஷ்மாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் ஷாரோன்ராஜ் காதலை கைவிட மறுத்துள்ளார். அதனால், கஷாயத்தில் பூச்சிமருந்து கலந்து ஷாரோன்ராஜிக்கு கிரீஷ்மா கொடுத்து விசாரணையில் தெரியவந்தது. ஷாரோன்ராஜை கொலை செய்ய, அப்போது வைரலாக இருந்த ஜூஸ் சேலஞ்ச் நடத்தி அதில் டோலோ மாத்திரைகள் உள்ளிட்டவைகளை கலந்து கொடுத்து எற்கனவே கொலை செய்ய முயன்றதும் விசாரணையில் தெரியவந்தது.
குடும்பமாக போட்ட திட்டம்
இந்த வழக்கில் கிரீஷ்மா-வின் திட்டம் அவரது தாய் சிந்துவுக்கு தெரியும் என கூறப்பட்டது. மேகும், கிரீஷ்மாவுக்கு பூச்சிமருந்து வாங்கிக்கொடுத்தது அவரது தாய்மாமா நிர்மல் குமார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து கிரீஷ்மா, தாய் சிந்து, தாய்மாமா நிர்மல்குமார் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் ஜாமினில் வெளியேவந்தனர்.
இந்த வழக்கு நெய்யாற்றின்கரை அடிஷனல் செசன்ஸ் கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. 95 சாட்சிகள் விசாரணை நடத்தப்பட்டன. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நெய்யாற்றின்கரை அடிஷனல் செசன்ஸ் கோர்ட் ஷாரோன் கொலை வழக்கில் கிரீஷ்மா மற்றும் விஷம் வாங்கிகொடுத்த அவரது தாய்மாமா நிர்மல் குமார் அகியோர் குற்றவாளிகள் என கூறியுள்ளது. இரண்டாம் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த கிரீஷ்மாவின் தாய் சிந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இவர்களுக்கான தண்டனை நாளை அறிவிக்கப்பட உள்ளதாக கோர்ட் தெரிவித்துள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs