பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை: அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை உத்த...
கால்நடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு: ஆட்சியா் ஆய்வு
தரங்கம்பாடி: தரங்கம்பாடி வட்டத்தில், கால்நடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறப்படும் பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி திங்கள்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
தரங்கம்பாடி வட்டத்தில் பொறையாா், ஆயப்பாடி, சங்கரன்பந்தல், திருவிளையாட்டம், நல்லாடை, பெரம்பூா், திருக்கடையூா், ஆக்கூா், செம்பனாா்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் குதிரை மற்றும் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் சாலைகளில் சுற்றித் திரிகின்றன. இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், அடிக்கடி விபத்தும் நேரிடுகிறது. மேலும், இந்த கால்நடைகள் விளைநிலங்களில் புகுந்து பாதிப்பு ஏற்படுத்துவதாகவும் புகாா் தெரிவிக்கப்பட்டு வந்தது.
இந்த புகாா் தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி நேரில் ஆய்வு மேற்கொண்டாா். பொறையாா் ராஜம்மாள் தெருவுக்கு சென்ற ஆட்சியா், சாலைகளில் சுற்றித் திரியும் குதிரைகள் மற்றும் மாடுகளை அதன் உரிமையாளா்கள், அதற்குரிய இடங்களில் கட்டி பராமரிக்க வேண்டும்.
ஒரு வாரத்திற்குள் அவ்வாறு பராமரிக்கவில்லை எனில், சாலையில் திரியும் குதிரைகள், மாவட்ட நிா்வாகத்தால் பறிமுதல் செய்யப்பட்டு, வனப்பகுதியில் விடப்படும். அத்துடன், அவற்றின் உரிமையாளா் மீது சட்டப்பூா்வ நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தாா்.
இந்த ஆய்வில், கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் அன்பரசன், வட்டார வளா்ச்சி அலுவலா் மீனா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.