காஸா போர் நிறுத்தம்: அமெரிக்க அதிபரை சந்திக்கிறார் இஸ்ரேல் பிரதமர்!
காஸாவில் நடைபெற்ற சண்டைக்கு முற்றுப்புள்ளியாக, கடந்த மாதம் ஏற்பட்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, மொத்தம் 3 கட்டங்களாக அங்கு போர் நிறுத்தம் அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், ஒப்பந்தத்தின்கீழ் முதல்கட்டமாக ஆறு வாரங்களில் தங்களிடம் பிணைக் கைதிகளாக உள்ள 33 பேரை ஹமாஸ் அமைப்பு விடுவிக்கவும், அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறைகளில் உள்ள 1,900 பாலஸ்தீனா்களை அந்த நாட்டு அரசு விடுதலை செய்யவும் ஒப்புக்கொள்ளப்பட்டு அதன்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தின்கீழ், 2-ஆம் கட்ட நடவடிக்கைகளை அமல்படுத்துவது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் நாளை(பிப். 4) பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார். முன்னதாக, இவ்விவகாரம் குறித்து மத்திய கிழக்கு பகுதிகளுக்கான அமெரிக்க தூதர் ஸ்டீவ் விட்காஃப்பை சந்தித்து இன்று(பிப். 3) பேசவுள்ளார் பெஞ்சமின் நெதன்யாகு.
இதற்காக ஞாயிற்றுக்கிழமை(பிப். 2) இஸ்ரேலிலிருந்து புறப்பட்டு அமெரிக்கா சென்றடைந்தார் நெதன்யாகு. அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த மாதம் பதவியேற்றபின், அவரை முதல்முதலாகச் சந்தித்துப் பேசும் வெளிநாட்டுத் தலைவர் நெதன்யாகு ஆவார். முக்கியத்துவமிக்க இந்த சந்திப்பு வெள்ளை மாளிகையில் இன்று நடைபெறுகிறது.