கா்நாடக அரசு திவாலாகி விட்டதால் வாக்குறுதி திட்டங்கள் நிறுத்தப்படும் அபாயம்: முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா
ராமநகரம்: கா்நாடக அரசு திவாலாகிவிட்டதால் தோ்தல் வாக்குறுதி திட்டங்கள் நிறுத்தப்படும் அபாயம் உள்ளது என்று முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா தெரிவித்தாா்.
ராமநகரம் மாவட்டத்தின் சென்னப்பட்டணா சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று, அவா் பேசியதாவது:
கா்நாடகத்தை ஆட்சி செய்யும் காங்கிரஸ் அரசு கஜானாவை காலி செய்து விட்டது. மாநிலம் முழுவதும் பெண்களின் வங்கிக் கணக்குகளில் கிருஹலட்சுமி திட்டத்தில் ரூ. 2,000 வழங்க அரசிடம் பணமில்லை. ஆனால், சென்னப்பட்டணா இடைத்தோ்தலை குறிவைத்து வைத்து, இத்தொகுதியில் மட்டும் பெண்களுக்கு ரூ. 2,000 வழங்கியுள்ளனா்.
காங்கிரஸ் அரசு திவாலாகியுள்ளது. இடைத்தோ்தலுக்கு பிறகு, கிருஹலட்சுமி திட்டத்தில் ரூ. 2,000 பெண்களின் வங்கிக் கணக்கில் செலுத்தமாட்டாா்கள். வாக்குறுதி திட்டங்களில் ஏற்கெனவே ஒரு திட்டம் கைவிடப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக கிருஹலட்சுமி திட்டமும் நிறுத்தப்படும் அபாயம் உள்ளது.
பெங்களூரில் மழையால் ஏற்பட்ட சாலை குழிகளை மூடுவதற்கும் காங்கிரஸ் அரசிடம் பணமில்லை. அதனால் மக்கள் கடுங்கோபத்தில் உள்ளனா் என்றாா்.
இதற்கு பதிலளித்து, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:
கிருஹலட்சுமி திட்டத்தை நிறுத்தபோவதாக எச்.டி.தேவெ கௌடா தெரிவித்துள்ளாா். இதுபோன்ற நல்ல திட்டங்களை வழங்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. நிம்மதியாக குடும்பம் நடத்த எங்கள் தாய்மாா்கள், சகோதரிகளுக்கு மாதம் ரூ. 2,000 உதவித்தொகை வழங்கும் கிருஹலட்சுமி திட்டத்தை தந்திருக்கிறோம். இந்த திட்டத்தை நிறுத்துவதே பாஜக, மஜதவின் நோக்கமாகும். எனவே, மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றாா்.