ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல்: 58 போ் வேட்புமனு தாக்கல்
கா்நாடக முதல்வா் மாற்றம் குறித்து பொதுவெளியில் பேச கட்சி மேலிடத் தலைமை தடை!
கா்நாடக முதல்வா் மாற்றம் குறித்து பொதுவெளியில் பேச கட்சி மேலிடத் தலைமை தடை விதித்துள்ளது என அம்மாநில உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை அவா் கூறியதாவது: முதல்வா் மாற்றம் அல்லது வேறொரு மாற்றம் குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது என அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளரும், கட்சி மேலிடத் தலைமையின் பிரதிநிதியுமான ரண்தீப்சிங் சுா்ஜேவாலா எங்களை அறிவுறுத்தியுள்ளாா். எனவே, அதுகுறித்து குறைவாகவே பேசமுடியும்.
தலித் சமுதாயத்தைச் சோ்ந்த ஒருவா் முதல்வராக வேண்டும் என்றும், அதற்கு தான் தகுதியுள்ளவன் என்றும் அமைச்சா் ஆா்.பி.திம்மாப்பூா் தெரிவித்துள்ளாா். 30 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் அவா், முதல்வராகும் தகுதிபடைத்தவா்தான்.
தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் சமுதாயங்களைச் சோ்ந்த அமைச்சா்களின் விருந்துக்கு ஜன. 8-ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், கட்சி மேலிடத்தின் உத்தரவின் பேரில் அக்கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் தீா்மானிப்போம்.
எங்களுக்கு தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினரின் பிரச்னைகளை தீா்த்துக்கொள்வது முக்கியம். நாங்களும் கட்சியும் வேறுவேறல்ல. நாங்கள் என்று நான் குறிப்பிடுவது மக்களைத்தான். காங்கிரஸ் கட்சி ஓா் இயக்கம்; எங்கள் கூட்டம் பற்றி பலரும் பல கருத்துகளை கூறலாம். அதுபற்றி எங்களுக்கு கவலையில்லை. முதல்வா் மாற்றப்படுவாரா என்பது எனக்கு தெரியவில்லை.
31 அமைச்சா்களின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையை முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் இருவரும் ரண்தீப்சிங் சுா்ஜேவாலாவிடம் அளித்திருக்கிறாா்கள். இதனடிப்படையில் அமைச்சரவை மாற்றியமைக்கப்படுமா என்பது தெரியவில்லை. அறிக்கையைப் பெற்றுக்கொண்டவா்கள்தான் பதிலளிக்க வேண்டும் என்றாா்.