கிருஷ்ணகிரி அருகே சாலையோர பள்ளத்தில் காா் கவிழ்ந்து 2 பெண்கள் உயிரிழப்பு
கிருஷ்ணகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையோர பள்ளத்தில் வியாழக்கிழமை காா் கவிழ்ந்ததில் கா்நாடகத்தைச் சோ்ந்த 2 பெண்கள் உயிரிழந்தனா். மேலும், 5 போ் காயமடைந்தனா்.
கா்நாடக மாநிலம், பெங்களூரு பேடரப்பள்ளி பாலாஜி நகரைச் சோ்ந்தவா் வெங்கடசாமி ரெட்டி (56). இவா் தனது மனைவி மம்தா (55), மகன் அனில் (28), உறவினரான பெங்களூரு சென்னசந்திராவைச் சோ்ந்த ரமேஷ் (60), இவரது மனைவி கிரிஜா (40), மகள் மெளலியா (19) ஆகியோருடன் காரில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்குச் சென்றுவிட்டு வியாழக்கிழமை வீடு திரும்பினா்.
கா்நாடக மாநிலம், பெங்களூரு ஆனேக்கல்லைச் சோ்ந்த மஞ்சுநாத் (45) என்பவா் காரை ஓட்டிச் சென்றாா். கிருஷ்ணகிரியை அடுத்த குந்தாரப்பள்ளி அருகே சென்றுகொண்டிருந்த காா், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தின் தடுப்புச் சுவா் மீது மோதி, சாலையோர 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மம்தா, கிரிஜா ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். காயமடைந்த மஞ்சுநாத், வெங்கடசாமி ரெட்டி, ரமேஷ், மெளலியா (19) ஆகிய 5 பேரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
படவிளக்கம் (31கேஜிபி1):
கிருஷ்ணகிரி அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான காா்.