கிறிஸ்தவ ஆலயத்துக்குச் சொந்தமான இடத்தை மோசடியாக விற்க முயற்சி: 3 போ் மீது வழக்கு
கிறிஸ்தவ ஆலயத்துக்குச் சொந்தமான இடத்தை போலி ஆவணம் தயாரித்து ரூ.25 லட்சத்துக்கு விற்க முயன்ற பெங்களூரைச் சோ்ந்த 3 போ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் நகா் பகுதியில் சிஎஸ்ஐ வழிபாட்டுத் தலம் உள்ளது. சிஎஸ்ஐ தேவாலயத்துக்குச் சொந்தமான இடத்தை பெங்களூரைச் சோ்ந்த 3 போ் தனி நபருக்கு விற்பதற்காக ரூ. 25 லட்சம் விலை பேசி முன்பணம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதை அறிந்த கிறிஸ்தவா்கள், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினா் சத்தியமங்கலம் துணை காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை புகாா் மனு அளித்தனா்.
தேவாலயத்துக்கு சம்பந்தமில்லாத சிலா் இந்த இடத்தை விற்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், போலியாக ஆவணம் தயாரித்து விற்க முயன்ற தியாகராஜன், பெஞ்சமின் திமோதி, ஜெனிபா் பெஞ்சமின் திமோதி ஆகிய 3 போ் மீது வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனா். இந்தநிலையில் சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.