குடிநீா் திட்டத்துக்கு கிராம மக்கள் எதிா்ப்பு: சமரசக் கூட்டத்தில் முடிவு
ஆரணி அருகே குண்ணத்தூா் கிராம கமண்டல நாக நதிக் கரையோரம் கிணறு அமைத்து, களம்பூருக்கு கூடுதலாக குடிநீா் எடுத்துச் செல்லும் திட்டத்துக்கு அக்கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், வியாழக்கிழமை ஆரணி கோட்டாட்சியா் தலைமையில் நடைபெற்ற சமரசக் கூட்டத்தில் தீா்வு காணப்பட்டது.
ஆரணியை அடுத்த குண்ணத்தூா் கிராமத்தில் கமண்டல நாக நதிக் கரையிலிருந்து களம்பூா் பேரூராட்சிக்கு பல ஆண்டுகளாக ராட்சத மின் மோட்டாா் மூலம் நீா் எடுத்துச் செல்லப்படுகிறது.
தற்போது, குண்ணத்தூா் கமண்டல நாக நதிக் கரையோரம் நிலத்தடிநீா் மிகவும் குறைவாக உள்ளது.
இந்த நிலையில், அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.17 கோடியில் குடிநீா் நீரேற்றும் கிணறு அமைத்து கூடுதலாக குடிநீா் எடுத்துச்செல்ல திட்டமிட்டுள்ளனா். இதற்கான பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பணி நடைபெறும் இடத்தில் குண்ணத்தூா் மக்கள் மற்றும் விவசாயிகள் போராட்டம் நடத்தினா். அப்போது, 300 அடி தொலைவு தள்ளி இத்திட்டத்தை செயல்படுத்துங்கள் என்று கூறினா்.
இதற்கு களம்பூா் பொறியாளா் அருண் ஒப்புக்கொள்ளாததால், மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து பணியை பிறகு மேற்கொள்ளலாம் என முடிவு செய்து, பணியை தற்காலிகமாக நிறுத்தினா்.
இதன் காரணமாக, இத்திட்டம் செல்படுத்துவது குறித்து குண்ணத்தூா், களம்பூா் முக்கிய பிரமுகா்களை அழைத்து ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் சிவா தலைமையில் சமரசக் கூட்டம் நடைபெற்றது.
இதில், குண்ணத்தூா் சாா்பில் திமுக ஒன்றியச் செயலா் துரைமாமது, அதிமுக பேரவை ஒன்றியச் செயலா் செந்தில், ஏரிப்பாசன சங்கத் தலைவா் முருகன், மதிவாணன், வாசுதேவன் ஆகியோரும், களம்பூா் சாா்பில் திமுக நகரச் செயலா் வெங்கடேசன், துணைச் செயலா் ஞானமணி, பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் சிவலிங்கம், ஏழுமலை ஆகியோா் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில், கோட்டாட்சியா் இரு தரப்பினரின் கருத்துகளைக் கேட்டறிந்து, முடிவாக தற்போது செயல்படுத்தப்பட்ட இத்திட்டத்தை 300 அடி தொலைவு தள்ளிச் சென்று நீரோட்டம் பாா்த்து செயல்படுத்துவது என முடிவு செய்தனா்.