இந்திய வான்வெளியைப் பயன்படுத்த பாகிஸ்தானுக்கு தடை நீட்டிப்பு
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்! பணிகளைத் தொடங்கியது தேர்தல் ஆணையம்!
குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான பணிகளைத் தொடங்கியதாக இந்திய தேர்தல் ஆணையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், மருத்துவக் காரணங்களுக்காக அரசியலமைப்பின் பிரிவு 67(ஏ) -ன் படி, தனது பதவியை ராஜிநாமா செய்வதாக குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுக்கு திங்கள்கிழமை இரவு கடிதம் அனுப்பினார்.
இதனைத் தொடர்ந்து, ஜகதீப் தன்கரின் ராஜிநாமாவை ஏற்றுக்கொண்டு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு குடியரசு தலைவர் அனுப்பியதாக மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.
தேர்தல் பணிகள் தொடக்கம்
இந்த நிலையில், புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலுக்கான பணிகளைத் தொடங்கியதாக இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:
”அரசியலமைப்பு பிரிவு 324 இன் கீழ், இந்திய குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரம் பெற்றுள்ளது.
அதன்படி, குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் தொடர்பான தயாரிப்புப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்தவுடன் தேர்தலுக்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும்.
தேர்தலில் வாக்களிக்க தகுதியுடைய மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்களின் பட்டியல் தயாரித்தல், தேர்தல் அதிகாரி மற்றும் உதவித் தேர்தல் அதிகாரிகளை இறுதி செய்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜகதீப் தன்கரின் பதவிக் காலம் 2027 வரை இருக்கும் நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே ராஜிநாமா செய்துள்ளார். இந்த நிலையில், புதிதாக தேர்வு செய்யப்படவுள்ள குடியரசு துணைத் தலைவர், முழு பதவிக் காலமான 5 ஆண்டுகள் பதவியில் இருப்பார்.
அடுத்த சில நாள்களில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான அட்டவணை வெளியிடப்பட்டு, அடுத்த மாத இறுதிக்குள் தேர்தல் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.