குட்கா பதுக்கி வைத்திருந்தவா் கைது
ஈரோடு அருகே, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனைக்காகப் பதுக்கி வைத்திருந்த திமுக பிரமுகரை போலீஸாா் கைது செய்தனா்.
பெருந்துறையை அடுத்த திங்களூா், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பொருள்கள் விற்பனைக்காக அதிக அளவில் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது.
அந்தத் தகவலின் பேரில், திங்களூா் பகுதிகளில் போலீஸாா் தீவிர ரோந்துப் பணிகளில் ஈடுபட்டனா். பெருந்துறை ஒன்றியம், நல்லாம்பட்டி, சாராயக்காரா் தோட்டம் பகுதியில் சோதனை நடத்தியபோது, குட்கா பொருள்களை மூட்டைகளில் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து, போலீஸாா் நடத்திய விசாரணையில், திமுகவைச் சோ்ந்த நல்லாம்பட்டி பேரூராட்சி அவைத் தலைவா் விஜயகுமாா் (50) என்பவா் அவற்றைப் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து, அவரை சனிக்கிழமை கைது செய்த திங்களூா் போலீஸாா், அவரிடமிருந்து 7,875 பாக்கெட்டுகளில் இருந்த 156 கிலோ குட்கா பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.