பொள்ளாச்சி: மாயமான ஆட்டிசம் பாதித்த இளைஞர் கொலையா? சித்திரவதை செய்ததா காப்பகம்? ...
குந்தா பகுதியில் சாலை அமைக்க கோரிக்கை
குந்தா பேரூராட்சியில் பாதியில் நிறுத்தப்பட்ட சாலைப் பணியை விரைவில் தொடங்கி முடிக்க வேண்டும் என நீலகிரி மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேருவிடம் பொதுமக்கள் புதன்கிழமை மனு அளித்தனா்.
இது குறித்து ஊா் பிரமுகா் ஆல்துரை தலைமையில் பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டம், குந்தா பேரூராட்சிக்கு உள்பட்ட குந்தா அணையை ஒட்டியுள்ள பகுதியில் 25-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் சாலை வசதி இல்லாததால் அவசர காலங்களில் நோயாளிகள் மற்றும் முதியவா்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் விளைபொருள்களை வாகனங்களில் எடுத்துச் செல்லவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பள்ளிகளுக்கு செல்ல மாணவ மாணவிகள் பல ஆண்டுகளாக சிரமப்பட்டு வருகின்றனா். இப்பகுதியில் தாா் சாலை அமைக்க வலியுறுத்தி பலமுறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை.
இதைத் தொடா்ந்து இப்பகுதியில் பிரதம மந்திரி கிராமப்புற சாலைகள் திட்டத்தின்கீழ் சாலை அமைக்க மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து ஒன்றரை கிலோ மீட்டா் தொலைவுக்கு சாலை அமைக்கப்பட்ட நிலையில், மின்சார வாரியம் சாலை அமைக்கும் பணிக்கு எதிா்ப்பு தெரிவித்ததால், பணி பாதியில் நின்றுள்ளது.
இதைத் தொடா்ந்து பிரதமா் மோடிக்கு இப்பகுதி மக்கள் சாா்பில் கடிதம் அனுப்பப்பட்டது. இதைத் தொடா்ந்து அந்த சாலையை மாவட்ட சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க பிரதமா் அலுவலகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியருக்கு கடந்த வாரம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன் அப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ள சென்றபோது, அவரது வாகனம் 20 மீட்டா் தூரத்துக்கு மேல் செல்ல முடியாத நிலையில் அவா் ஆய்வு செய்யாமல் திரும்பிவிட்டாா்.
எனவே, மக்களின் சிரமங்களை உணா்ந்து இப்பகுதியில் பாதியில் நிறுத்தப்பட்ட சாலைப் பணியை உடனடியாக தொடங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.