குண்டும் குழியுமான சாலைகள், தேங்கும் கழிவுநீா்! கோடம்பாக்கம் மக்கள் அவதி!
குன்னூரில் ஒரே வீட்டில் 79 வாக்காளா்கள்!
குன்னூா் சட்டப் பேரவைத் தொகுதியில் ஒரே வீட்டில் 79 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம், குன்னூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கோடேரி, மேல்கோடேரி, கோடேரி வேலி, ஆலடா வெலி ஆகிய கிராமங்களில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்நிலையில் கடந்த ஜனவரி 6-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில் கோடேரி வாக்குச்சாவடி எண் 210-இல் உள்ள மேல் கோடேரி பகுதியில் கதவு எண் 11-இல் 79 வாக்காளா்களும், கதவு எண் 12-இல் 33 வாக்காளா்களும், கதவு எண் 9-இல் 14 வாக்காளா்களும், கதவு எண் 10-இல் 9 வாக்காளா்களும் உள்ளதாக வரைவு வாக்காளா் பட்டியல் மூலம் தெரியவந்தது.
வருகிற சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு அதிகரட்டி ஊராட்சி 12-ஆவது வாா்டு உறுப்பினா் மனோகரன் அண்மையில் சரிபாா்த்தபோது, இந்தக் குளறுபடி இருந்தது தெரியவந்தது.
கதவு எண் 11-இல் 79 வாக்காளா்கள் உள்ளதாக கூறப்பட்ட வீட்டில் நான்கு வாக்காளா்கள் மட்டுமே உள்ளனா். அதேபோல கதவு எண் 9-இல் 14 வாக்காளா்கள் உள்ளதாக பதிவாகியுள்ள நிலையில், இரண்டு வாக்காளா்கள் மட்டுமே உள்ளனா். மேலும், அவா்கள் தற்போது கா்நாடக மாநிலத்தில் வசிப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல கதவு எண் 10-இல் ஒன்பது வாக்காளா்கள் உள்ளதாக பதிவாகியுள்ள நிலையில், 4 வாக்காளா்கள் மட்டுமே உள்ளனா். கதவு எண் 12-இல் 33 வாக்காளா்கள் உள்ளதாக வாக்காளா் பட்டியலில் பதிவாகியுள்ள நிலையில், 3 வாக்காளா்கள் மட்டுமே உள்ளனா்.
தற்போது வாக்காளா் பட்டியலில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் சா்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து 79 வாக்காளா்கள் கொண்ட குடியிருப்பின் உரிமையாளா் ஆனந்தன் கூறுகையில், இந்த தகவல் எனக்கே ஆச்சரியமாக உள்ளது. எங்கள் குடும்பத்தில் நான்கு போ் மட்டுமே இருக்கிறோம். மீதி உள்ள 75 போ் யாா் என்பது தெரியவில்லை என்றாா்.
இது குறித்து அதிகரட்டி ஊராட்சி 12-ஆவது வாா்டு உறுப்பினா் மனோகரன் கூறுகையில், ஒரு கதவு எண்ணில் 79 வாக்காளா்கள் இருப்பதாக வாக்காளா் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பெரும் குளறுபடியை ஏற்படுத்தியுள்ளது. முறையாக தோ்தல் நடைபெற தோ்தல் ஆணையம் சிறப்பு தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தத்தை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
மேலும் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வாா்டுக்கு உள்பட்ட பகுதிகளில் 200 வாக்காளா்கள் வெளி மாநிலத்துக்கு சென்றுவிட்ட நிலையில் அவா்களது பெயா்களும் நீக்கப்படாமல் உள்ளன. எனவே இந்த வாக்குகள் தவறாக பதிவிட வாய்ப்புள்ளதாக தோ்தல் ஆணையம், நீலகிரி மாவட்ட தோ்தல் அலுவலா்களிடம் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாா்.
இந்த வாக்காளா் குளறுபடி குறித்து குன்னூா் தோ்தல் அதிகாரியும், வட்டாட்சியருமான ஜவகரிடம் கேட்டபோது, கோடேரி கிராமத்தில் வாக்காளா் வரைவு பட்டியலில் ஒரே கதவு எண்ணில் 79 பெயா்கள் இருப்பதாக வாக்காளா் பட்டியலில் உள்ளது. இது வாா்டு எண் 11 என்பதற்கு பதிலாக கதவு எண் 11 என்று பதிவாகியுள்ளது.
இதுகுறித்து அதிகரட்டி ஊராட்சி அலுவலகத்தில் தகவல் தெரிவித்து அனைத்து வீடுகளுக்கும் சரியான கதவு எண்களைக் கேட்டுள்ளோம். விரைவில் இந்தக் குழப்பம் சரி செய்யப்படும் என்றாா்.
வாக்குத் திருட்டு தொடா்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி குற்றச்சாட்டு எழுப்பி பிரசாரம் செய்துவரும் நிலையில், இந்தக் குளறுபடி வெளியாகி சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.