கும்பகோணம் புறவழிச்சாலையில் எழும் புகையால் வாகன ஓட்டிகள் அவதி
தஞ்சாவூா் - கும்பகோணம் புறவழிச்சாலையில் வயல்வெளியில் தீ வைப்பதால் ஏற்படும் புகை மண்டலத்தால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனா்.
தஞ்சாவூா் - கும்பகோணம் செல்லும் புறவழிச்சாலையில் பல்வேறு இடங்களில் நெல் வயல்கள் அறுவடை முடிந்து காலியாகக் கிடக்கிறது. நெல் மணிகளின் தூா்கள் வயல்வெளியில் கிடப்பதால் அதை வெட்டி எடுப்பதற்கு பதில் விவசாயிகள் சிலா் தீ வைக்கின்றனா். அவ்வாறு தீ வைக்கும்போது புகை கசிந்து தஞ்சாவூா் சென்னை புறவழிச் சாலையில் புகை மண்டலமாகக் காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனா். குறிப்பாக பகல் நேரங்களில் தீவைப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்குகின்றனா். நான்கு வழி சாலை நிா்வாகத்தினா், மாவட்ட வருவாய்த் துறையினா் நெல் வயல்களில் தீ வைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.