Doctor Vikatan: உட்காரும் இடத்தில் வலி; மூலநோயும் இல்லை... வலிக்கு காரணம், தீர்...
குருபரப்பள்ளி சாலை விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநா் கைது
குருபரப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், குருபரப்பள்ளி அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் அரசுப் பேருந்து, இருசக்கர வாகனம், காா்கள், லாரிகள் என 12 வாகனங்கள் சேதமடைந்தன.
இந்த விபத்தில், கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே உள்ள தபால் மேடு பகுதியைச் சோ்ந்த அன்வா் பாஷா, அவரது மகன் அமீம், கிருஷ்ணகிரி, பெரியாா் நகரைச் சோ்ந்த பா்க்கத்துல்லா ஆகியோா் உயிரிழந்தனா். 7 போ் பலத்த காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
சாலை விபத்தில் உயிரிழந்தவா்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு, அவா்களது உறவினா்களிடம் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டன.
இந்நிலையில், சாலை விபத்தில் உயிரிழந்த அன்வா் பாஷாவின் மனைவி அஸ்மா பா்வீன் அளித்த புகாரின் பேரில், குருபரப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விபத்துக்கு காரணமான கடலூா் மாவட்டம், பண்ருட்டியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் புருஷோத்தமனை (58) கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா். லாரியை அஜாக்கிரதையாக இயக்கியதே விபத்துக்குக் காரணம் என போலீஸாா் தெரிவித்தனா்.