குருப்பெயர்ச்சி பலன்கள் - 2025: மேஷம்
மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)
உங்கள் ராசிக்கு தைரிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கத் தொடங்கும் குரு பகவானின் அருளால் முக்கியமான விஷயங்களில் நிதானமாக முடிவெடுத்து வெற்றி பெறுவீர்கள். செய்தொழிலில் நிரந்தர வளர்ச்சி அடைவதற்கான அடித்தளத்தை அமைத்துக்கொள்வீர்கள். குடும்பத்தில் ஒரு நியதிக்கு உட்பட்டு சிறப்பாக சிந்திப்பீர்கள். ஆர்வக் கோளாறைத் தவிர்த்து நடக்கக் கூடியவை பற்றி நேர்வழியில் சிந்தித்துச் செயல்படுவீர்கள். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். பெற்றோர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
குரு பகவானின் கருணையினால் இந்தக் காலகட்டத்தில் உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே தொடரும். உங்களின் சூட்சும புத்தியால் இக்கட்டான தருணங்களிலும் சமயோஜிதமாகப் பேசி நிலைமையைச் சமாளிப்பீர்கள். ஆன்மிகத்தில் நம்பிக்கையுடன் நடைபோடுவீர்கள். கடன் ஏதும் ஏற்படாது.
குரு பகவானின் பார்வை உங்களின் ஏழாம் இடமான நட்பு ராசியின் மீது படிகிறது. அதனால் நண்பர்கள், கூட்டாளிகளுடன் விட்டுக்கொடுத்து இணக்கமாகப் பழகுவீர்கள். கணவன் - மனைவிக்கு இருந்த உடல் உபாதைகள் அனைத்தும் விலகும். சுயதொழில் செய்ய வாய்ப்பு கிடைக்கும். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். திருமணம், மகப்பேறு போன்ற சுபகாரியங்களை இல்லத்தில் நடத்துவீர்கள். உங்கள் செயல்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள்.
உங்கள் தந்தை மற்றும் பாக்யஸ்தானமான ஒன்பதாம் வீட்டின் மீது படியும் குரு பகவானின் பார்வையினால் பூர்வீகச் சொத்துகள் கைக்கு வரும். அவற்றிலிருந்து நிரந்தர வருமானம் வரத் தொடங்கும். நற்செயல்களைச் செய்து அதனால் வரும் வருமானத்தைக் கொண்டு சில தான தர்மங்களைச் செய்வீர்கள். குழந்தைகளால் சந்தோஷம் அடைவீர்கள்.
உங்களின் லாபஸ்தானத்தின் மீது படியும் குரு பகவானின் பார்வையினால் உங்கள் மனம் விரும்பும் மாற்றங்களை இல்லத்திலும் தொழிலிலும் செய்வீர்கள். இதனால் புதிய வழிகளில் வருமானத்தைப் பெற முயற்சி செய்வீர்கள். தொலை தூரத்திலிருந்து நல்ல செய்திகளைக் கேட்பீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு
விரும்பிய பணி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களிடம் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். மனதில் புதிய தெளிவு பிறக்கும். சக ஊழியர்கள் நட்பு பாராட்டுவார்கள். அலுவலகப் பயிற்சிகளில் தேர்ச்சியடைவீர்கள்.
வியாபாரிகள்
சுக சௌகரியங்களை பாராமல் கடினமாக உழைப்பீர்கள். ஆனாலும் போட்டியாளர்களின் முட்டுக்கட்டைகளை எதிர்கொள்ள நேரிடும். கூட்டாளிகளை நம்பாமல் நீங்களே முன்னின்று செயல்பட்டால் வியாபாரத்தில் குளறுபடிகளைத் தவிர்க்கலாம். உங்களின் நேரடிப் பார்வையிலேயே பண விஷயங்களைக் கையாளவும்.
விவசாயிகள்
விளைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்த்த கடன் கிடைத்து நீர்வரத்து உயரும். புதிய குத்தகைகளை எடுப்பீர்கள். பால் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தைக் காண்பீர்கள். வழக்குகள் சுமுகமாக முடியும்.
அரசியல்வாதிகள்
கட்சியில் ஆதரவைப் பெறுவீர்கள். ஆனாலும் தொண்டர்கள் சற்று பாராமுகமாகவே நடந்துகொள்வார்கள். சமுதாயத்திற்குப் பயன்படும் உண்மையான தொண்டுகளில் ஈடுபடுத்திக்கொள்வீர்கள். எதிரிகளின் ரகசியத் திட்டங்களை அம்பலப்படுத்துவீர்கள்.
கலைத்துறையினர்
அனைத்து காரியங்களும் வெற்றிகரமாக முடிவடையும். உங்களைத் தேடி புதிய வாய்ப்புகள் வரும். திறமைகளைச் சரியாக வெளிப்படுத்துவீர்கள். பொருளாதார வசதிகள் உயரும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள்.பெண்மணிகள் ஆக்கப்பூர்வமான காரியங்களில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தாருடன் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வீர்கள். முக்கிய முடிவுகளை யோசித்து எடுக்கவும். ஆடம்பரச் செலவுகளைச் செய்ய வேண்டாம்.
மாணவமணிகள் படிப்பில் ஏற்படும் இடையூறுகளைச் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். ஒருமித்த மனதுடன் படித்து மதிப்பெண்களை அள்ளுவீர்கள். நண்பர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள்.
அஸ்வினி: தந்தைக்கு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வரவேண்டிய பணபாக்கிகள் வந்து சேரும்.
பரணி: சுபகாரிய விஷயமாக வெளியூர் செல்ல நேரிடலாம். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும்.
கார்த்திகை - 1: புதிய வாகனம் யோகம் வந்துசேரும். உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சனைகளில் தலையிடுவதும் கத்து சொல்வதையும் தவிர்த்தல் நலம்.
பரிகாரம்: வெள்ளிதோறும் அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்குச் சென்று வாருங்கள். அவளுக்கு மஞ்ச வஸ்திரம் கொடுத்து அணிவியுங்கள்.