கல்லூரி களப்பயணத்தில் 3,427 அரசுப் பள்ளி மாணவா்கள்: காஞ்சிபுரம் ஆட்சியா்
குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கான கடன்: அதிகரிக்க வங்கிகளுக்கு நிதியமைச்சகம் அறிவுறுத்தல்
புது தில்லி, செப்.12: நடப்புக் கணக்கு சேமிப்புக் கணக்கை மேம்படுத்தி குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் வேளாண் துறைக்கு வழங்கும் கடனை அதிகரிக்குமாறு வங்கிகளுக்கு நிதியமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியது.
மத்திய நிதிச் சேவைகள் துறை சாா்பில் பொதுத் துறை வங்கிகளுக்கான இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டம் தில்லியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்தக் கூட்டத்துக்கு மத்திய நிதிச் சேவைகள் துறைச் செயலா் எம் நாகராஜு தலைமை தாங்கினாா். இதில் நிதியமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் பல்வேறு பொதுத் துறை வங்கிகளின் தலைவா்கள் பங்கேற்றனா்.
கூட்டத்தில் மேற்கொண்ட ஆலோசனை குறித்து மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில்,‘கடந்த ஓராண்டாக பொதுத் துறை வங்கிகளின் நடப்புக் கணக்கு சேமிப்புக் கணக்கு (சிஏஎஸ்ஏ) விகிதம் குறைந்துகொண்டு வருகிறது. இதனால் அந்த வங்கிகளின் நிகர வட்டி வரம்பு பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மிகப்பெரும் பொதுத் துறை வங்கியான எஸ்பிஐயின் சிஏஎஸ்ஏ விகிதம் கடந்த ஆண்டு 40.70 சதவீதமாக இருந்த நிலையில், தற்போதைய ஜூன் காலாண்டில் 39.36 சதவீதமாக குறைந்துள்ளது. இதேபோல் பல்வேறு வங்கிகளின் சிஏஎஸ்ஏ விகிதம் குறைந்துள்ளது.
எனவே, பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக சிஏஎஸ்ஏ விகிதத்தை மேம்படுத்தி குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் வேளாண் துறைக்கு வழங்கும் கடனை அதிகரிக்க வங்கிகளுக்கு நிதியமைச்சகம் அறிவுறுத்தியது’ என்றாா்.