கேரளத்துக்கு கடத்த முயன்ற மண்ணெண்ணெய் பறிமுதல்
நித்திரவிளை அருகே மங்காடு ஆற்றுப்பாலம் வழியாக சொகுசு காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 1,000 லிட்டா் மண்ணெண்ணெய்யை போலீஸாா் பறிமுதல் செய்து, காா் ஓட்டுநரை கைது செய்தனா்.
இது தொடா்பாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், நித்திரவிளை உதவி ஆய்வாளா் ராஜா ராபா்ட், சிறப்பு உதவி ஆய்வாளா் அமலதாஸ் மற்றும் போலீஸாா் மங்காடு பகுதியில் வியாழக்கிழமை வாகனக் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
அப்போது சந்தேகப்படும் வகையில் வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனா். சோதனையில், படகுகளுக்கு அரசு மானிய விலையில் வழங்கும் மண்ணெண்ணெய் இருந்தது கண்டறியப்பட்டது.
விசாரணையில், காரை ஓட்டி வந்தவா் மிடாலம் பகுதியைச் சோ்ந்த ஜான் பெஸ்கி (43) என்பதும், மிடாலம், குறும்பனை பகுதி மீனவா்களிடமிருந்து 1,000 லிட்டா் மானிய விலை மண்ணெண்ணெய்யை வாங்கி, கேரள பகுதியில் உள்ள வியாபாரிக்கு விற்பனைக்காக கொண்டு சென்றதும் தெரிய வந்தது. காருடன் மண்ணெண்ணெய்யை போலீஸாா் பறிமுதல் செய்து, ஓட்டுநரை கைது செய்தனா்.