கேரள தலைநகரிலுள்ள விடுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்திலுள்ள பல்வேறு விடுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்திலுள்ள பிரபல நட்சத்திர விடுதி உள்பட பல்வேறு விடுதிகளில் ஐ.ஈ.டி. எனப்படும் நவீன வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, இன்று (ஏப்.26) மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு, மோப்ப நாய்களின் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் அந்த விடுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அந்த விடுதிகளில் சந்தேகப்படும்படியான எந்தவொரு பொருளும் கிடைக்காததினால், இந்த மிரட்டல் போலியானது என உறுதி செய்யப்பட்டது.
முன்னதாக, கடந்த சில மாதங்களாக கேரளத்திலுள்ள ஆட்சியர் அலுவலகம், உயர் நீதிமன்றம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு மின்னஞ்சல்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வந்தன.
பின்னர், அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் அவை அனைத்தும் போலியானது என உறுதியானது. இருப்பினும், இந்தச் சோதனைகளினால் அவ்விடங்களில் மேற்கொள்ளப்படும் பணிகள் தடைப்படுவதும், அங்கு உண்டாகும் பரபரப்பான சூழல்களும், மக்களுக்கான சேவையை வெகுவாக பாதிப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: சிந்து நதிநீரை நிறுத்திவிடுவீர்கள்.. ஆனால் எங்கே தேக்கிவைப்பீர்கள்? அசாதுதீன் ஒவைசி கேள்வி