1,000-க்கும் மேற்பட்ட இந்தியா்கள் பாகிஸ்தானில் இருந்து வெளியேறினா்
கைகொடுத்ததா, சுந்தர் சி - வடிவேலு கூட்டணியின் கம்பேக்? - கேங்கர்ஸ் திரை விமர்சனம்
நீண்ட இடைவேளைக்குப் பிறகு சுந்தர் சி, வடிவேலு காம்போவில் ஒரு கலகலப்பான எண்டர்டெய்னருக்கான எதிர்பார்ப்போடு வெளியாகியிருக்கும் திரைப்படம் கேங்கர்ஸ். பழைய காம்போ கம்பேக் கொடுத்து கலக்கியதா?
கதைக்களம் என்று பார்த்தால் பள்ளி ஒன்றில் தாளாளர் மற்றும் அவரது சகோதரர்கள் வழக்கம்போல் சில வரம்பு மீறிய அநியாயங்களைச் செய்கிறார்கள். அவர்களது தவறான செயல்களால் அந்தப் பள்ளியில் உள்ள மாணவர்களின் உயிருக்கு ஆபத்து நேரிடுகிறது. இந்தத் தவறுகளை அந்தப் பள்ளி ஆசிரியர் கேத்ரின் தெரசா தட்டிக்கேட்க முயல்கிறார். போலீசில் கொடுத்த புகார்கள் கால்நீட்டி படுத்துத் தூங்கிக்கொண்டிருக்க, பொங்கி எழும் அவர் உயர் அதிகாரி ஒருவருக்கு மெயில் அனுப்ப, அவர்கள் ஒரு ரகசிய போலீசை ஆசிரியராக அந்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கிறார்கள். அந்தப் பள்ளி அந்த கெட்டவர்கள் கையிலிருந்து மீண்டதா என்ற கேள்விக்கான பதிலோடு, வடிவேலுவின் காமெடி மற்றும், கேத்ரின் டீச்சருடனாக காட்சிகளையும் சேர்த்து சுவாரசியம் கூட்ட முயன்றிருக்கிறார் இயக்குநர் சுந்தர் சி!

முதலில் நாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம், இது சுந்தர் சி படம். வெறும் பொழுதுபோக்கு நோக்கில், லாஜிக்குகளுக்கு லீவ் விட்டுவிட்டு, நகைச்சுவையை மட்டுமே மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். இந்தப் படத்தை எதற்கு சீரியசாக எடுத்து விமர்சிக்க வேண்டும், ஜாலியாக பார்த்துவிட்டுக் கடந்து செல்லலாமே என சிலருக்குத் தோனலாம். என்ன விஷயம் என்றால், இதே டெம்ப்ளேட் கதைகளையும் இப்போது இதைவிட சிறப்பாக எடுக்க ஆட்கள் வந்துவிட்டதுதான்.
இதேபோல், எந்த ஒரு ஆழமான, சுவாரசியமான கதையும் இல்லாமல், வெறுமனே பொழுதுபோக்கு என எடுக்கும் இயக்குநர்களிடம்கூட நாம் உருவாக்கத்திலும், கதையம்சத்திலும், திரைக்கதையிலும் பல புதுமைகளைக் கண்டுவருகிறோம். ஆனால் சுந்தர் சி மாறாமல் அப்படியே இருக்கிறார் என்பது இந்தப் படத்தின் முக்கியமான மைனஸ்களில் ஒன்றாக, நன்றாகத் தெரிகிறது.
சரி, முதலில் என்ன நன்றாக இருந்தது எனப் பார்த்துவிடலாம். காமெடி எனும் கலைக்கு பிக்காசோவாக வலம் வந்த நம் வடிவேலுவை களத்தில் பார்த்தே ரொம்ப நாள் ஆகிக்கிடக்க, இந்தப் படத்தில் காமெடியனாக வெற்றி கண்டிருக்கிறார் எனக் கண்டிப்பாகச் சொல்லலாம்.
விழுந்து விழுந்து சிரிக்குமளவில் எதுவும் இல்லை என்றாலும், சில இடங்களில் வரும் காமெடி காட்சிகள் பழைய வடிவேலுவை நினைவு படுத்துகின்றன. சில காமெடிகள் பதுத்துப்போன வெடியாக வீணாகப் போவதையும் பார்க்க முடிந்தது என்றாலும், வடிவேலுவின் காமெடி கம்பேக் முயற்சிகளில் இந்தப் படம் நன்றாகவே இருக்கிறது. ஆரம்பத்தில் கொஞ்சம் சலைத்தாலும் போகப்போக வசனங்களால் நம்மைக் குலுங்க வைத்துவிடுகிறார். அவருக்கு படத்தில் இருக்கும் மிகப்பெரிய பங்கை தனது நகைச்சுவையால் பூர்த்தி செய்து அசத்துகிறார்.

அடுத்ததாக குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமெனில் சந்தான பாரதியின் கதாபாத்திரம் ஆரம்பத்தில் கொஞ்சம் நன்றாக இருந்தாலும், வடிவேலுவுடனான ஜோடியில் அவர் படம் முழுக்க இருப்பார் என நினைக்கும்போது, இடைவேளைக்கு அருகில் வரும்போதே ஏமாற்றம் ஆரம்பித்துவிடுகிறது. அவர்களது கொள்ளையடிக்கும் திட்டத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு நல்ல பங்கு இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமே என்றே தோன்றுகிறது. ஆகாஷ் என்ற பெயரில் அவர் வரும் காட்சிகள் சில ரசிக்கும்படியாக இருந்தாலும் அந்தக் கதாபாத்திரத்தை முழுதாகப் பயன்படுத்தவில்லையோ என்றே தோன்றுகிறது.
அடுத்ததாக குறிப்பிட்டுச் சொல்லவென படத்தில் வேறு எதுவுமே சிறப்பாக இல்லை என்பது மீண்டுமொரு ஏமாற்றம்தான். டீச்சர் கேத்ரினுக்கு மிக முக்கியமான கதாப்பாத்திரம் என்றாலும், ஓவர் நடிப்பில் கொஞ்சம் பொறுமையிழக்கச் செய்கிறார். அதிலும் அங்கங்கு கவர்ச்சியாக காட்டி அதை மறைத்துவிடலாம் என இயக்குநர் முயன்றாலும், டீச்சரின் நடிப்பு முயற்சிகளால் அந்தத் திட்டங்களும் தோல்வியடைகின்றன. அந்தக் கவர்ச்சி காட்சிகளும், இயக்குநர் சொல்வதுபோல் முகம் சுளிக்காத வகையில், இளம் பார்வையாளர்கள் ரசிக்கும்படியாகவே கொடுக்க முயன்றிருக்கிறார். வழக்கமாக எல்லா படங்களிலும் கவர்ச்சி பாடல்களைத் துணைக்கு வைத்துக்கொள்ளும் நம் இயக்குநர் அதை படத்தோடு எப்படியாவது சேர்த்துவிட நினைப்பார். சேர்க்க இடமில்லையா? படம் முடிந்து பெயர் ஓடும்போது அந்தப் பாடலை இணைத்திருப்பார், ஆனால் இந்தப் படத்தில் அந்த முயற்சியிலும் கொஞ்சம் அசால்ட்டாக இருந்துவிட்டாரோ என்றே தோன்றுகிறது. (எங்கு வைத்தால் என்ன? பார்த்துவிட்டுப் போப்பா என நீங்கள் சொல்வது எனக்கு கேட்கிறது. இருந்தாலும்…)

முதல் பாதியில் சண்டை, வடிவேலு என மிகவும் சுமாராக நகர்ந்தாலும் தனது வழக்கமான டெம்ப்ளேட்டாக வைத்துள்ள பிளாஷ்பேக்கிலும் சுந்தர். சி சுவாரசியம் கூட்ட மறந்துவிட்டார். என்ன மாயமோ தெரியவில்லை, அந்த பிளாஷ்பேக்கில் வரும் காட்சிகள், டுவிஸ்ட்டுகள் எல்லாம் பார்வையாளர்களுக்கு முன்கூட்டியே தெரிந்துவிடுகிறது. அந்த அயர்ச்சியைக் காப்பாற்ற பிளாஷ்பேக்கில் வடிவேலுவும் இல்லாததால், 'அந்தப் புள்ளைய சட்டுப்புட்டுனு கொன்னுட்டு கதைக்கு வாங்கப்பா’ என்ற மனநிலை அனைவருக்கும் ஏற்படுகிறது.
முதல்பாதியில் பள்ளியை மட்டுமே மையமாக வைத்து நகரும் கதை, இரண்டாம் பாதியில் வேறெங்கோ திரும்பும்போது, கதை பார்வையாளர்களுடன் ஒட்டாமல் போய்விடுகிறது. அதையும் இது கமர்ஷியல் படம், சுந்தர் சி படம் என நினைக்கும்போது, ஓக்கே-தான் என்ற மனநிலை வந்துவிடுகிறது.
இரண்டாம் பாதி மற்றும் கிளைமேக்ஸில் வரும் தியேட்டர் காட்சிகள் வடிவேலுவால் அங்கங்கு சிரிக்க வைத்தாலும் காட்சியாக சிலரைக் கொஞ்சம் கடுப்பேற்றலாம். காட்சியைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம் என்றும் தோன்றலாம்.

முடிவாக, குடும்பத்துடன் ஒரு கேங்காக சென்றால் கண்டிப்பாக திரையரங்கில் நீங்கள் இந்தப் படத்தைக் கண்டுகளிக்கலாம். எந்த ஆழமான ஆர்வமூட்டும் கதைக்களமும் இல்லாமல், சில சிரிக்கும் தருணங்களுக்காக இந்தப் படத்தைத் தேர்வு செய்யலாம். ஆனால் நீங்கள் ஓரளவுக்கு சினிமா பிரியராக இருந்தாலும், நல்ல சினிமாக்களை பார்க்க விரும்புகிறீர்கள், உலக சினிமா வெல்லாம் பார்ப்பீர்கள், படம் முடியும்போது ஏதாவது எடுத்துச்செல்ல வேண்டும் என நினைப்பீர்கள் என்றால், இந்தப் படம் உங்களை மிகவும் சோதிக்கும். ஆனால் கொஞ்சம் விடாமுயற்சியும், மன உறுதியும் இருந்தால் வடிவேலுவால் படம் முழுக்க உட்கார்ந்துவிடலாம்….