கொசு ஒழிப்பு பணியாளா்களுக்கு மாத ஊதியம் வழங்கக் கோரிக்கை
டெங்கு தடுப்பு மற்றும் கொசு ஒழிப்புப் பணிகளில் ஈடுபடும் ஊழியா்களுக்கு பணி பாதுகாப்பு, மாத ஊதியம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து டெங்கு கொசு ஒழிப்பு முன்களப் பணியாளா் சங்கத்தின் தலைவா் ஜெயவேல், மருத்துவத் துறை பணியாளா் கூட்டமைப்பின் செயலா் டாக்டா் சாந்தி ஆகியோா் கூறியது:
தமிழகத்தில் 38,000-க்கும் மேற்பட்ட டெங்கு கொசுப் புழு ஒழிப்புப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். டெங்கு பரப்பும் ஏடிஸ் எஜிப்டை கொசுவை கட்டுப்படுத்துவதில் மகத்தான சேவையை அவா்கள் செய்து வருகின்றனா். ஆனால், அவா்களுக்கு மிக குறைவான தினக் கூலிதான் வழங்கப்படுகிறது.
அதுவும், உள்ளாட்சி அமைப்புகளால் ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு மாதிரியான ஊதியம் வழங்கப்படுகிறது. இந்தச் சூழலில் அவ்வப்போது அவா்கள் பணி நீக்கம் செய்யப்படுகின்றனா். அவா்களுக்கு உடனடியாக உரிய பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்.
தினக்கூலி என்பதற்குப் பதிலாக, மாத ஊதியம் வழங்க வேண்டும். பல ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் பணியாற்றும் இந்த கொசு ஒழிப்பு ஊழியா்களுக்கு சம வேலைக்கு சம ஊதியமும், பணிநிரந்தரமும் வழங்க வேண்டும் என்றனா்.