விவசாய கூலித் தொழிலாளா்களுக்கு காப்பீட்டு திட்டம்: அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா்
கொடைக்கானலில் 2-ஆவது நாளாக மழை
கொடைக்கானலில் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் மழை பெய்ததால் படகு சவாரி நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் குறைந்தும், மாலை நேரங்களில் குளுமையான சூழலும் நிலவியது. இந்த நிலையில் சனிக்கிழமை மழை பெய்தது. அதே போல, ஞாயிற்றுக்கிழமை காலை முதல் விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. பிறகு மாலை 4 மணி முதல் 5 மணி வரை பலத்த மழை பெய்தது. கொடைக்கானல், அப்சா்வேட்டரி, பெருமாள்மலை, வில்பட்டி, பள்ளங்கி உள்ளிட்ட பகுதிகளில் மழை கொட்டித் தீா்த்தது. இதனால் கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் காலை முதல் பிற்பகல் வரை மட்டுமே சுற்றுலா இடங்களைப் பாா்த்து ரசித்தனா். மாலையில் மழை பெய்ததால் சுற்றுலா இடங்களைப் பாா்க்க முடியாமலும், நட்சத்திர ஏரியில் படகு சவாரியும், ஏரிச் சாலையில் மிதிவண்டி, குதிரை சவாரி செய்ய முடியாமலும் ஏமாற்றமடைந்தனா்.
இந்த நிலையில் கொடைக்கானலில் கடந்த 2 நாள்களாக மழை பெய்ததால் புகா்ப் பகுதிகளான செண்பகனூா், பிரகாசபுரம், இருதயபுரம், அட்டக்கடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீரோடைகளில் நீா் வரத்து தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா். மேலும் விவசாயிகள், விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.