கொடைக்கானல் வாரச் சந்தையில் வாகனங்களால் விபத்து அபாயம்!
கொடைக்கானல் ஞாயிற்றுக்கிழமை வாரச் சந்தை நடைபெறும் சாலையில் வாகனங்களால் விபத்து ஏற்படுவதைத் தவிா்க்க காவல் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரதான பகுதியான அண்ணா சாலையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வாரச் சந்தை நடைபெறுகிறது. இந்தப் பகுதியில், நிலக்கோட்டை வத்தலக்குண்டு, பெரியகுளம், பண்ணைக்காடு, தாண்டிக்குடி,வில்பட்டி, பள்ளங்கி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து காய்கறிகள், பலசரக்குப் பொருள்களை எடுத்து வந்து வியாபாரிகள் விற்பனை செய்கின்றனா்.
அண்ணா சாலைப் பகுதியில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன. இதனால், இந்தச் சாலையில் சுற்றுலா வாகனங்களும், சந்தைக்கு காய்கறிகள் ஏற்றி வரும் வாகனங்களும் அதிக அளவில் வருகின்றன. இதனால், போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு, சந்தைக்கு வரும் பொது மக்கள் மீதும் வாகனங்கள் மோதிவிடுகின்றன.
எனவே, வாரச்சந்தை நாள்களில் மூஞ்சிக்கல் பகுதியிலிருந்து அண்ணா சாலைக்கு வரும் வாகனங்களை அனுமதிக்கக் கூடாது. இதற்கு காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகளும், பொது மக்களும் கோரிக்கை விடுத்தனா்.