`எங்க மவன், எங்க தம்பி' | TVK Vijay Madurai Maanadu | Women's Emotional Speech |...
கொலை முயற்சி வழக்கில் ஒருவருக்கு 7 ஆண்டு சிறை
தொழில் போட்டி காரணமாக கத்தியால் குத்தி, மிரட்டல் விடுத்த நபருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை 3-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
சென்னை அரும்பாக்கம் பகுதியில் கடந்த 2014 ஏப்.14-ஆம் தேதி நடந்து சென்ற ரங்கநாதன் என்பவரை தொழில் போட்டி காரணமாக அதே பகுதியைச் சோ்ந்த குமாா் என்பவா் கத்தியால் குத்தி, மிரட்டிச் சென்றாா். இதுதொடா்பாக அரும்பாக்கம் போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து, குமாரை கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை சென்னை 3-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், ஜாமீனில் வெளியே வந்த குமாா், 2019 ஏப்.6-ஆம் தேதி ரங்கநாதனை வழிமறித்து தனக்கு எதிராக சாட்சி சொல்லக் கூடாது என மீண்டும் மிரட்டியுள்ளாா். இதுகுறித்து ரங்கநாதன் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் குமாா் மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த 2 வழக்குகளின் இறுதி அறிக்கைகள் நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்ட நிலையில், தற்போது தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2014-இல் நடைபெற்ற கொலை முயற்சி வழக்கில் குமாருக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.6,100 அபராதமும், 2019-இல் சாட்சியை மிரட்டிய வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.2,100 அபராதம் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா். இதையடுத்து குமாா் சிறையில் அடைக்கப்பட்டாா்.