கோயில் அன்னதானத் திட்டத்தில் திருத்தம் செய்ய பூசாரிகள் நலச் சங்கம் வலியுறுத்தல்
பல்லடம்: கோயில் அன்னதானத் திட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று கோயில் பூசாரிகள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து நலச் சங்கத்தின் மாநிலத் தலைவா் வாசு செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள கோயில்களில் அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. போதிய வருவாய் இல்லாத பல கோயில்களில் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் சிரமம் உள்ளது. அன்னதானத் திட்டத்தை விரிவுபடுத்துகிறோம் என்ற பெயரில் போதிய வருமானம் இல்லாத கோயில்கள் மற்றும் பட்டியலில் சோ்ந்த கோயில்கள் என வகைப்படுத்தி நாள்தோறும் 25 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
இதுபோன்ற கோயில்களில் சமையல் செய்யும் பணியாளா்களுக்கான ஊதியம், மளிகைப் பொருள்களுக்கான செலவுகள் என உண்டியல் வருவாய் தேவையின்றி வீணாகிறது.
இல்லை எனில் இத்திட்டத்தை செயல்படுத்த உபயதாரா்களை நாட வேண்டி உள்ளது. போதிய நிதி ஆதாரம், வருவாய் இருக்கும்பட்சத்தில் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை.
எனவே, வருவாய் குறைந்த கோயில்களில் அன்னதானத்துக்கு பதில் பிரசாதங்களை வழங்கும் வகையில் திட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள இந்து சமய அறநிலையத் துறை முன்வர வேண்டும் என்றாா்.