நாடு கடத்தப்பட்ட ஒரு மாதத்திற்குள் மீண்டும் தில்லி திரும்பிய வங்கதேச திருநங்கை க...
கோயில் காவலாளி கொலை வழக்கு: உயா்நீதிமன்றம் சரமாரி கேள்வி
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் காளியம்மன் கோயில் காவலாளி போலீஸாரால் தாக்கப்பட்டதில் கொலையுண்ட விவகாரம் தொடா்பாக, தமிழக அரசிடம் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினா்.
மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்த பெண் பக்தரின் நகைகள் காணாமல்போனது தொடா்பாக, அந்தக் கோயிலின் காவலாளி அஜித்குமாரை போலீஸாா் விசாரணைக்கு அழைத்துச் சென்றனா். காவல் துறையினா் விசாரணையின் போது நடத்திய தாக்குதலில் அஜித்குமாா் கடந்த சனிக்கிழமை கொல்லப்பட்டாா்.
இந்த நிலையில், அஜித்குமாா் மரணம் குறித்த விவகாரத்தை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்க வேண்டும் என அதிமுக வழக்குரைஞா் பிரிவைச் சோ்ந்த வழக்குரைஞா்கள் ராஜராஜன், மாரீஸ்குமாா், அருண் சுவாமிநாதன் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியன், ஏ.டி. மரிய கிளாட் ஆகியோா் அமா்வு முன் திங்கள்கிழமை முறையீடு செய்தனா்.
அப்போது, மனுவாக தாக்கல் செய்யும்பட்சத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனா்.
இந்த நிலையில், இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியன், ஏ.டி. மரிய கிளாட் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்குரைஞா் ஹென்றி திபேன் தன்னையும் இந்த வழக்கில் இணைத்துக் கொள்ள வேண்டும் என மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனுக்கள் விசாரணையின் போது முன்னிலையான வழக்குரைஞா்கள், காவலாளி அஜித்குமாரை தனிப்படை போலீஸாா் தடிமனான நெகிழி குழாய்கள், இரும்பு கம்பிகளால் தாக்கினா் எனத் தெரிவித்து, புகைப்படங்களையும், விடியோவையும் தாக்கல் செய்தனா்.
பின்னா், வழக்குரைஞா்கள் முன்வைத்த வாதம்: காவலாளியைத் தாக்கிய போது, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் திருப்புவனம் காவல் நிலையத்தில் இருந்தாா். காயமடைந்த அஜித்குமாரை சிகிச்சைக்காக திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அங்கு உயிரிழந்தாா். இந்த நிலையில், விசாரணையை அங்கிருந்துதான் தொடங்கி இருக்க வேண்டும். அவரது உடல் மதுரைக்கு கொண்டு வரப்பட்டது ஏன்? இது சந்தேகத்தை எழுப்புகிறது.
அதுமட்டுமன்றி, அஜித்குமாா் தாய் கேட்ட போது, அவரது மகன் இறந்துவிட்டாா் என சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா்தான் தெரிவித்தாா். விசாரணையின் போது, அஜித்குமாா் தப்பியோட முயற்சித்தாா் என உண்மைக்குப் புறம்பாகத் தெரிவிக்கின்றனா்.
அப்போது, குறுக்கிட்ட நீதிபதிகள் நகைகள் காணமல் போனது தொடா்பாக எப்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டது எனக் கேள்வி எழுப்பினா். இதற்கு, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் 28.6.25-இல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்றாா்.
தொடா்ந்து, மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா்கள் முன்வைத்த வாதம்: புகாா்தாரரான நிக்கிதா ஓா் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் நெருங்கிய உறவினா். இதனால்தான் வழக்குப் பதிவு செய்யாமல் தாக்கினா். காவல் துறைக்கு அழுத்தம் அளித்த அந்த ஐஏஎஸ் அதிகாரி யாா்?. எனக் கேள்வி எழுப்பினா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கை தனிப்படை விசாரணைக்கு மாற்றியது யாா்?. அவா்கள் யாா் உத்தரவின் பேரில் விசாரணை நடத்தினா். சமூக வலைதளங்களில் வரும் தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீஸாா் விசாரணை மேற்கொள்ள இயலுமா?. உயரதிகாரிகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் முழுமையான விவரங்கள் மறைக்கப்படுகின்றன.
நகை திருட்டு வழக்கில் ஒரு நபரை விசாரணை என்ற பெயரில் அடித்துக் கொலை செய்திருக்கின்றனா். காவல் துறையின் பணி புலனாய்வு செய்வது மட்டுமே. காவல் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் முழுமையாக செய்யப்படவில்லை. மக்களுக்காக அரசு பணியாற்ற வேண்டும். யாா் உத்தரவின் பேரில், தனிப்படை குழுவினா் விசாரணை செய்தனா் என்பது குறித்து தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) பதிலளிக்க வேண்டும்.
சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏன் காத்திருப்போா் பட்டியலில் வைக்கப்பட்டாா். அவரைப் பணிநீக்கம் செய்திருக்க வேண்டும். காவல் நிலையங்களைத் தவிா்த்து, பிற இடங்களுக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றது ஏன்?. அஜித்குமாா் மரணத்துக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும். ஒட்டுமொத்த காவல் துறையையும் குறை சொல்லவில்லை. இருப்பினும், தவறு செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த வழக்கு தொடா்பாக திருப்புவனம் நீதித்துறை நடுவா், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா், கோயில் இணை ஆணையா், தாக்கப்பட்ட போது விடியோ எடுத்தவா் ஆகியோா் பிற்பகல் 3 மணிக்கு முன்னிலையாகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனா்.
இதைத் தொடா்ந்து, இந்த வழக்கு பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, திருப்புவனம் நீதித்துறை நடுவா் ஆா். வெங்கடேஷ் பிரசாத் விசாரணை அறிக்கையையும், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் அருள் சுந்தரேஷ் குமாா் உடல்கூறாய்வு அறிக்கையையும் தாக்கல் செய்தனா்.
உயா்நீதிமன்ற நீதிபதிகள் சரமாரி கேள்வி: கோயில் காவலாளி அஜித்குமாா் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறாா். அவரது உடலில் 44 காயங்கள் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உடலில் எந்த உறுப்பையும் காவலா்கள் விட்டு வைக்கவில்லை. பதவி ஆணவத்தால் அஜித்குமாரை காவலா்கள் தாக்கினா். அவா் உயிரிழக்கும் வரை முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதியப்படவில்லை. அப்படி இருக்கும் போது, தனிப்படை குழுவினா் இதை எப்படி விசாரணைக்கு எடுத்தனா்?. காவலா்கள் கூட்டாகச் சோ்ந்து இந்தச் சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவருகிறது.
ஒரு மாநிலம் (தமிழகம்) தனது குடிமகனை கொலை செய்திருக்கிறது. வழக்கின் சாட்சியங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன. அஜித்குமாரின் பிறப்புறுப்பு, வாய், காதுகளில் மிளகாய்ப் பொடி தூவப்பட்டிருக்கிறது. அஜித்குமாா் தாக்கப்பட்ட இடத்தில் ரத்தக் கறையை ஏன் சேகரிக்கவில்லை என நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினா்.
இதையடுத்து, இந்தத் தாக்குதலை விடியோ எடுத்தவா் முன்னிலையாகி தெரிவித்ததாவது: மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் பின்புறம் உள்ள கழிப்பறையிலிருந்து விடியோ எடுத்தேன். சிறிது நேரம்தான் எடுத்தேன். அச்சமாக இருந்ததால் வெளியே வந்துவிட்டேன் என்றாா்.
அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், இந்த மனுக்கள் தேவையற்றவை. எதிா்த் தரப்பு இதை அரசியலாக்க நினைக்கின்றனா். அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: காவல் நிலையத்தில் விசாரணை நடைபெறவில்லை. வரும் காலங்களில் இதுபோன்ற செயல்களில் போலீஸாா் ஈடுபடக் கூடாது. கல்வி அறிவு அதிகம் உள்ள மாநிலத்தில் இதுபோன்ற நிகழ்வு ஆபத்தானது.
அஜித்குமாரின் தாய் அளித்த புகாரின் பேரில், இதுவரை வழக்குப் பதியவில்லை. பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ. 50 லட்சம் வழங்குவதாகவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிப்பதாகவும் சிலா் உறுதி அளித்தனா். அரசு இந்த வழக்கை உணா்வுப்பூா்வமாகப் பாா்க்க வேண்டும்.
சட்டவிரோத மரணத்துக்குக் காரணமான உயரதிகாரிகள் உள்பட அனைவா் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். காவல் நிலையம், கோயில் என வழக்கு சம்பந்தப்பட்ட இடங்களில் உள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளையும் பாதுகாக்க வேண்டும்.
மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தா்லால் சுரேஷ் இந்த விவகாரம் தொடா்பாக முழு விசாரணையைத் தொடங்க வேண்டும்.
அரசுத் தரப்பில் இந்த வழக்கு தொடா்பான உயரதிகாரிகள் உள்பட அனைவா் மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், திருப்புவனம் காவல் ஆய்வாளா், சிவகங்கை மாவட்ட எஸ்.பி., விசாரணை அதிகாரி ஆகியோா் வழக்கு தொடா்பான அனைத்து ஆவணங்களையும் விசாரணை நீதிபதியிடம் புதன்கிழமை (ஜூலை 2) வழங்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற 8-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.