கோலாகலமாக நடந்த திருச்செந்தூர் குடமுழுக்கு; 5 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம்!
தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும், கடற்கரையோரம் அமைந்துள்ளது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில். இக்கோயிலில் கடந்த 2009-ம் ஆண்டு குடமுழுக்கு விழா நடந்தது. அதன் பிறகு 15 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு இன்று 7-ம் தேதி நடைபெற்றது. கடந்த 2022-ம் ஆண்டு ரூ.300 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்டவளாக பணிகள் நடந்து முடிந்துள்ளது.

திருக்கோயிலின் மேற்கு கோபுரத்தின் அருகே கடந்த 40 நாள்களுக்கு முன்பு யாகசாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கியது. சுமார் 8,000 சதுர அடியில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட யாகசாலை அமைக்கப்பட்டது. கடந்த 1-ம் தேதி முதல் குடமுழுக்கு விழாவிற்கான யாகசாலை பூஜைகள் தொடங்கியது. யாகசாலையில் 71 ஹோமகுண்டங்கள் அமைக்கப்பட்டு, 700 கடங்கள் வைக்கப்பட்டு, 96 மூலிகைகள் இடப்பட்டு சிவாச்சாரியார்கள் தலைமையில் பூஜைகள் நடைபெற்றன.
தினமும் காலையிலும் மாலையிலும் யாகசாலை பூஜைகள் நடந்தது. இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று ஏற்கெனவே தமிழக அரசு அறிவித்த நிலையில் அதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் செய்திருந்தது. கும்பாபிஷேகத்தை காண பக்தர்கள் கடற்கரை வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

கும்பாபிஷேக நிகழ்வை கண்டு களிக்க நகர் முழுவதும் 70 பெரிய எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், அதிகாலை 4 மணி அளவில் 12-ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. அதைத் தொடர்ந்து தீபாராதனையும் பூர்ணாகுதியும் நடந்தது. அதைத் தொடர்ந்து பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க கடம் புறப்பாடு தொடங்கியது. கோயிலை சுற்றி வந்த கடத்திற்கு பின்னால் மேளதாளங்கள் முழங்க. பக்தர்கள் ”கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா” என கோஷமிட்டபடி பின்தொடர்ந்து வந்தனர்.
தொடர்ந்து ராஜகோபுரத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்ட கடம் கோயிலின் மேற்கு வாசல் வழியாக அமைக்கப்பட்ட தற்காலிக பாதை மூலம் ராஜகோபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அமைக்கப்பட்டுள்ள 9 கலசங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து அதிகாலை சரியாக 6.22 மணிக்கு அமைச்சர் சேகர்பாபு பச்சை கொடி காட்டவும், 9 கலசங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா விமரிசையாக நடந்தது.

அதைத் தொடர்ந்து கலசங்களுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதே நேரத்தில் மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள், நடராஜர், ராஜகோபுரம் உள்பட பரிவார மூர்த்திகள் சன்னதிகளில் உள்ள கலசங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது.
திருச்செந்தூர் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். அப்போது தமிழிலும் குடமுழுக்கு நடத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். அதேபோல் இன்று குடமுழுக்கு விழா தமிழில் மந்திரங்கள் முழங்க குடமுழுக்கு நடைபெற்றது.
குடமுழுக்கு விழா நிறைவடைந்ததும் பக்தர்கள் இருந்த கடற்கரை பகுதியில் 20 ராட்சத ட்ரோன்கள் மூலம் பக்தர்கள் மேல் மூன்று முறை புனித நீர் தெளிக்கப்பட்டது.

6,000 மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். குடமுழுக்கு விழா நிறைவடைந்ததும் பக்தர்கள் எந்த வழியில் வெளியே செல்வது என்பதில் குழப்பம் ஏற்பட்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் சீர் செய்யப்பட்டது.
தமிழகம் முழுவதிலும் இருந்து 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதால் பேருந்திற்காக பக்தர்கள் காத்திருக்கும் நிலை ஏற்படவில்லை. சென்னை, நெல்லையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. பக்தர்களுக்காக 15 இடங்களில் அன்னதானம் நடைபெற்றது.