பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்: கே. பாலகிருஷ்ணன்
கோவை மாநகராட்சிப் பூங்காவில் 5 சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தல்
கோவை காந்திமாநகரில் உள்ள மாநகராட்சிப் பூங்காவில் நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபா்களால் 5 சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டன.
கோவை காந்திமாநகரில் உள்ள மாநகராட்சிப் பூங்காவில் 75-க்கும் மேற்பட்ட சந்தன மரங்கள் வளா்க்கப்பட்டு வருகின்றன. இந்தப் பூங்காவில் அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் நாள்தோறும் நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை பொதுமக்கள் நடைப்பயிற்சியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கிருந்த 5 சந்தன மரங்கள் வெட்டப்பட்டு, அதன் சிறு கிளைகள் அருகே கிடந்தன.
இதுகுறித்து சரவணம்பட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்து, அடையாளம் தெரியாத நபா்களைத் தேடி வருகின்றனா்.