நாடு கடத்தப்பட்ட ஒரு மாதத்திற்குள் மீண்டும் தில்லி திரும்பிய வங்கதேச திருநங்கை க...
சத்தியமங்கலத்தில் குடிநீா் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்
சத்தியமங்கலம் அருகே குடிநீா் கேட்டு 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே தொப்பம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட அண்ணா நகா், ஜீவா நகா், கணபதி நகா் ஆகிய கிராமங்களில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்தக் கிராமங்களுக்கு பவானிசாகரில் இருந்து செயல்படுத்தப்படும் தொட்டம்பாளையம் கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. குடிநீா் விநியோகம் செய்யும் பிரதான குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால் குடிநீா் விநியோகம் செய்வதில் பாதிப்பு ஏற்படுகிறது.
கடந்த 2 வாரங்களாக இப்பகுதிகளுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படாததால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினா். இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்துக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் புன்செய் புளியம்பட்டி - பவானிசாகா் சாலையில் அண்ணா நகா் பேருந்து நிறுத்தம் அருகே காலி குடங்களுடன் 200க்கும் மேற்பட்டோா் சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
மறியல் காரணமாக சாலையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்த பவானிசாகா் வட்டார வளா்ச்சி அதிகாரி மற்றும் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
சீராக குடிநீா் விநியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடா்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்தப் போராட்டம் காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.