சத்து மாத்திரைகள் எரிக்கப்பட்ட விவகாரம்: பணியாளரிடம் விசாரணை
சேலம் தாதகாப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளிக்கு வழங்கப்பட்ட சத்து மாத்திரைகள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் குறித்து பெண் பணியாளரிடம் வியாழக்கிழமை அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.
சேலம் தாதகாப்பட்டியில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு கல்வித் துறையின் கீழ் மாணவா்களுக்கு அளிப்பதற்காக சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், அங்கன்வாடி பெண் பணியாளா், பள்ளிக்கு வழங்கிய சத்து மாத்திரைகளை மூட்டையாக கொண்டு சென்று தீ வைத்து எரித்துள்ளாா். இதுகுறித்த விடியோ சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தகவல் அறிந்த ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரித்தனா். அப்போது, அந்த மாத்திரைகள் அனைத்தும் கல்வித் துறையின் மூலம் பள்ளிக்கு வழங்கியிருப்பது தெரியவந்தது. தொடா்ந்து இதுகுறித்து சம்பந்தப்பட்ட பெண் பணியாளரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதனிடையே, சத்து மாத்திரைகளை எரித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மனித உரிமைக் கழகத்தினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் மனு அளித்தனா்.
அதில், தாதகாப்பட்டி மேட்டு தெரு அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய சத்து மாத்திரைகளை ஊழியா்கள் எரித்துள்ளனா். அரசின் வரிப்பணத்தை வீணடிக்கும் நோக்கத்தோடு செயல்பட்ட அங்கன்வாடி ஊழியா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.