Malavika Mohanan: ``முதல் வாய்ப்பு இப்படித்தான் கிடைத்து'' - மம்மூட்டிக்கு குறித...
சந்திர கிரகணம்: திருப்பதி செல்வோர் கவனத்துக்கு...!
சந்திர கிரகணம் காரணமாக திருமலையில் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் பௌர்ணமி கருட சேவையை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
திருமலையில் மாதந்தோறும் பெளர்ணமியை முன்னிட்டு கருடசேவை நடைபெற்று வருகிறது. ஆனால், இன்று(செப். 7) ஞாயிற்றுக்கிழமை இரவு 9.35 மணி முதல் நள்ளிரவு 1.15 மணி வரை சந்திர கிரகணம் நடைபெற உள்ளது.
எனவே திருமலை ஏழுமலையான் கோயில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 3.30 மணிக்கு மூடப்பட்டு, செப். 8- ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு சுப்ரபாதத்துடன் கோயில் கதவுகள் திறக்கப்பட்டு சுத்தி மற்றும் புண்யாஹவசனங்கள் செய்யப்படும்.
பின்னர், தோமலா சேவை, கொலுவு, பஞ்சாங்கஸ்ரவணம் மற்றும் அர்ச்சனை சேவை ஆகியவை தனித்தனியாக நடத்தப்படும். இதற்கிடையில், பக்தர்களுக்கு காலை 6 மணிக்கு ஏழுமலையான் தரிசனம் மீண்டும் தொடங்கும்.
சந்திர கிரகணம் காரணமாக திருமலையில் பெளர்ணமி அன்று நடக்கும் கருட சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
அன்னபிரசாத விநியோக மையங்கள் மூடல்
சந்திர கிரகணம் காரணமாக ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ரதீபலங்கார சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. திருமலையில் உள்ள அன்னபிரசாத விநியோக மையங்கள் செப். 7-இல் மூடப்படும்
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் திருமலையில் அன்னபிரசாத விநியோகம் இருக்காது. செப். 8-ஆம் தேதி காலை 8.30 மணிக்கு அன்னபிரசாத விநியோகம் மீண்டும் தொடங்கும்.
பக்தர்களின் வசதிக்காக, செப். 7 ஆம் தேதி மாலை 4.30 மணி முதல் அன்னபிரசாத துறையின் கீழ் 30,000 புளியோதரை பாக்கெட்டுகள் முன்கூட்டியே விநியோகிக்கப்படும். இதன் ஒரு பகுதியாக, ஏழுமலையான் கோயில் எதிரே உள்ள வைபவோற்சவ மண்டபம், ராம் பாகீச்சா, பிஏசி-1, சிஆர்ஓ, ஏஎன்சி பகுதிகள் மற்றும் ஸ்ரீவாரி சேவா சதன் ஆகிய இடங்களில் அன்னபிரசாதப் பாக்கெட்டுகள் விநியோகிக்கப்படும்.
ஸ்ரீவாரி பக்தர்கள் இந்த விஷயங்களைக் கவனத்தில் கொண்டு தங்கள் பயணத்தை திட்டமிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.