சனிப்பெயர்ச்சி 2025 சிம்மம் : புதியவர்களிடம் கவனம்; ஆரோக்கியத்தில் அக்கறை - என்ன பலன்கள் உங்களுக்கு?
திருக்கணிதப்படி வரும் மார்ச் 29.3.25 அன்று கும்பத்திலிருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார் சனிபகவான். சிம்ம ராசிக்கு 8-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப்போகிறார். `அஷ்டமத்துச் சனி கஷ்டம் தருமே’ என்று கலங்கவேண்டாம். எல்லா விஷயங்களிலும் முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொண்டால், எவ்வித பாதிப்புகளும் உண்டாகாது.
சிம்ம ராசிக்காரர்களுக்கான 15 பலன்கள்:
1. புதுவித அனுபவங்களைக் கொடுத்து வாழ்க்கையைப் புரியவைக்கப் போகிறார் சனி பகவான். எதிர்கொள்ளும் சவால்களை `கஷ்டங்கள்’ எனத் தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள். புடம் போட்ட தங்கமாய் நீங்கள் மிளிர அதித வாய்ப்புகள் உள்ளன.
2. இந்த வருடத்தில் குரு மற்றும் ராகு-கேது பெயர்ச்சியும் நிகழவுள்ளன. குரு லாப ஸ்தானத்தில் வந்தாலும்கூட, சனியின் ஆதிக்கத்தால் சிற்சில தேவையற்ற பிரச்னைகள் உருவாகலாம். குறிப்பாக மாணவர்கள் கல்வியில் அதீத கவனம் செலுத்தவேண்டும்.
3. வெளி உணவுகளைத் தவிர்த்துவிடுங்கள். மனதையும் உடலையும் உற்சாகமாக ஆரோக்கியமாகப் பேணுவதில் கவனம் செலுத்துங்கள். வீண் விமர்சனங்கள், ஆடம்பரச் செலவுகள், கேளிக்கைகளில் நாட்டம் ஆகியவற்றைத் தவிர்த்தால் போதும்; நடப்பதெல்லாம் நன்மையாகும்.
4. குடும்பத்தை எடுத்துக்கொண்டால், கணவன் - மனைவிக்குள் பிரச்னையை ஏற்படுத்திப் பிரிவை உண்டாக்க சிலர் முயற்சி செய்வார் கள். ஆகவே, வீட்டு விஷயத்தில் மூன்றாவது நபரை தலையிட அனுமதிக்காதீர்கள். இந்த ராசிக்காரர்கள், திருமணம் போன்ற சுபகாரியங் களைச் சற்றுத் தள்ளிப் போடுவது நலம். நன்கு ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்து முடிவெடுக்கவேண்டியது அவசியம்.

5. வங்கிக் காசோலைகள், சொத்து ஆவணங்கள், நகை மற்றும் பணம் கொடுக்கல் வாங்கலிலும் கவனம் தேவை. எவருக்காகவும் பொறுபேற்கக்கூடாது. கடன் வாங்கும் சூழல் வந்தாலும், தகுதிக்கு மீறி கடன் வாங்குவது கூடாது.
6. அஷ்டமத்தில் சனி இருப்பதால் வாகன விஷயத்தில் கவனம் வேண்டும். பொறுமை அவசியம். நட்பைத் தேர்ந்தெடுப்பதில் சிந்தித்து செயல்படவும். புதியவர்களை நம்பி புது முயற்சிகளில் இறங்கவேண்டாம்.
7. பெண்கள், எந்தவொரு விஷயத்திலும் பொறுமையாகவும் தெளிவாகவும் இருப்பது அவசியம். கடன் விஷயத்தில் அலட்சியம் வேண் டாம். தெய்வப் பலம் உங்களைப் பாதுகாக்கும். அலுவலகம் செல்லும் பெண்கள், பேச்சில் கவனமாக இருக்க வேண்டும்; எதிர்பார்த்தபடி சம்பளம் உயரும்.
8. சனி பகவான் மீனத்தில் அமர்ந்து, உங்கள் ராசிக்கு 2, 5, 10-ம் இடங்களைப் பார்வையிடுகிறார். சனி பகவான் உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டைப் பார்ப்பதால் சாதுர்யமாகப் பேசுவீர்கள். ஆனால் சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டுப் பிரச்னைகளில் சிக்கிக்கொள்வீர்கள். எதிர்பார்த்த பணம் வரும்.
9. சனி உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால், சிலரை சந்தேகக் கண்கொண்டு பார்ப்பீர்கள். பூர்வீகச் சொத்தில் பிரச்னைகள் வந்து சரியாகும்.
10. சனி உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டைப் பார்ப்பதால், பணியில் சவால்கள் இருக்கும். எனினும் புதிய டாஸ்குகளைத் திறம்பட முடித்துக்காட்டுவீர்கள். தொழிலில் அதீத முனைப்புடன் செயல்படுவீர்கள்.
11. இந்த ராசியைச் சேர்ந்த மகம் நட்சத்திரக்கார்கள் குடும்ப விஷயத்தில், முக்கிய முடிவெடுப்பதில் கவனத்துடன் செயல்பட வேண்டும். எனினும் வீடு, சொத்து போன்றவை நல்லபடி அமையும்.

12. பூரம் நட்சத்திரக்காரர்கள், உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். வெளி உணவுகள், நேரம் தவறிய உறக்கம் ஆகியவற்றைத் தவிருங்கள்.
13. உத்திரம் நட்சத்திரக்காரர்கள் தங்களின் உடல்நலன் மற்றும் தந்தையின் உடல்நலனில் அக்கறை காட்டுவது அவசியம். சிற்சில உடல் உபாதைகள் ஏற்படலாம்.
14. வியாபாரம், தொழில், போன்றவற்றில் சிம்ம ராசிக்காரர்கள் நற்பலன்களை அடைவார்கள் எனலாம். எனினும் அரசு விஷயங்களில் அலட்சியம் காட்டாதீர்கள்.
15. உத்தியோகத்தைப் பொறுத்தவரையிலும் இந்த ராசிக்காரர்களில் சிலர், வெளியூரில் பணியாற்ற வேண்டிவரும். வாய்ப்பு இருந்தால் இவர்கள், குடும்பத்தை விட்டு விலகி வேலை பார்ப்பது நன்மையை அளிக்கும். புது அதிகாரியால் சிற்சில நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். புது வாய்ப்புகளும், பொறுப்புகளும் சற்றுத் தாமதமாகக் கிடைக்கும்.