பழைய காருக்கு ரூ.4 லட்சம் செலவில் ‘இறுதிச் சடங்கு’: குஜராத் தொழிலதிபரின் வினோத ச...
சபரிமலை மண்டல பூஜை: பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் முதல் பாதுகாப்பு வரை முன்னேற்பாடுகள் முழு விவரம்!
மண்டல பூஜை ஆலோசனைக் கூட்டம்
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் மண்டல கால மகர விளக்கு பூஜைகளுக்காக நவம்பர் மாதம் 14-ம் தேதி மாலை நடை திறக்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஐயப்ப பக்தர்கள் கூட்ட நெரிசல் காரணமாக பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினார்கள். குடிக்க தண்ணீர் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் வரும் மண்டலகால மகர விளக்கு பூஜை காலத்தில் பக்தர்களுக்கு பல்வேறு வசதிகள் ஏற்படுத்தும் வகையில் அனைத்துத்துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
ரூ.5 லட்சம் இன்சூரன்ஸ் கவரேஜ்
முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்துக்கு தேவசம்போர்டு அமைச்சர் வாசவன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சர் வாசவன் கூறுகையில், "சபரிமலையில் பக்தர்களுக்கும் சுகமான தரிசனத்திற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த முறை சபரிமலைக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு இலவசமாக இன்சூரன்ஸ் கவரேஜ் ஏற்படுத்தி உள்ளது. ஒரு பக்தருக்கு ரூ.5 லட்சம் இன்சூரன்ஸ் கவரேஜ் ஏற்படுத்தப்படும். துரதிஸ்டவசமாக பக்தர்கள் மரணமடைந்தால் அவர்களது உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல அனைத்து ஏற்பாடுகளும் தேவசம்போர்டு சார்பில் செய்யப்படும்.
பாதுகாப்பு பணி
ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு பணியில் நியமிக்கப்படுவார்கள். முன்பு சபரிமலையில் பணி செய்த அனுபவம் உள்ள அதிகாரிகள் உள்பட 13,600 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். பாம்பு பிடி வீரர்களும் நியமிக்கப்படுவார்கள். 2500 தன்னார்வலர்கள் தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து பணி செய்வார்கள். ஸ்கூபா டைவிங் பயிற்சிபெற்றவர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
குடிநீர் ஏற்பாடு
அனைத்து முக்கிய பகுதிகளிலும் குடிநீர் ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செங்கன்னூர், எருமேலி, பம்பா உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் குளிப்பதற்கு பாதுகாப்பு வேலிகள் ஏற்படுத்த பட உள்ளன. நீர்நிலைகளில் பல்வேறு மொழிகளில் எச்சரிக்கை பலகைகள் அமைக்கப்படும்.
சிகிச்சைக்கான வசதிகள்..
நிலக்கல், சபரிமலை சன்னிதானம் ஆகிய பகுதிகளிலும், கோட்டயம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பத்தனம்திட்டா அரசு மருத்துவமனை, காஞ்சிரப்பள்ளி பொது மருத்துவமனை ஆகிய இடங்களில் சுகாதாரத்துறை சார்பில் சிகிச்சைக்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
பாம்பு கடித்தால் உடனடியாக அதற்கான உயிர்காக்கும் சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் செயல்படும் மூன்று கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்படும்.
போக்குவரத்து ஏற்பாடு
கே.எஸ்.ஆர்.டி.சி சார்பில் சிறப்பு போக்குவரத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேனி டூ பம்பா வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். உணவுகளின் தன்மை, வழங்கப்படும் அளவு, சுகாதாரம் ஆகியவை குறித்து பரிசோதனை செய்யப்படும்.
உணவுகளின் விலைகள் குறித்து ஆறு மொழிகளில் போர்டு வைக்கப்படும். கூடுதல் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்படும்.
போலீஸ் சேவை மையங்கள்
மகரக்கூட்டம் முதல் சன்னிதானம் வரை பக்தர்கள் ஓய்வு எடுப்பதற்காக ஆயிரம் இரும்பு இருக்கைகள் ஏற்படுத்தப்படும். அப்பகுதியில் குடிநீருக்கான வசதியும், டாய்லெட் வசதியும் ஏற்படுத்தப்படும். முக்கிய ரயில் நிலையங்களில் போலீஸ் சேவை மையங்கள் திறக்கப்படும்
பெருவழி பாதையில்..
காட்டுப்பாதையான பெருவழி பாதையில் தடை இல்லாத மின்சாரம் வழங்க மின்சாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
பெருவழி பாதையில் வனத்துறை சார்பில் 132 சேவை மையங்கள் திறக்கப்படும். காட்டுப்பாதையில் எலிபன்ட் ஸ்கொயர்டுகள் நியமிக்கப்படுவார்கள்.
நெட்வொர்க் கவரேஜ்க்காக பிஎஸ்என்எல் சார்பில் 22 மொபைல் டவர்கள் ஏற்படுத்தப்படும்.
அரவணை, அன்னதான வசதி
நடை திறக்கப்படும் முதல் நாளிலேயே 40 லட்சம் கண்டெய்னர்களில் அரவணை இருப்பு வைக்கப்பட்டிருக்கும்.
20 லட்சத்திற்கும் அதிகமான ஐயப்ப பக்தர்களுக்காக அன்னதானத்துக்கு ஏற்பாடுகள் சன்னிதானத்தில் செய்யப்பட்டுள்ளது
பார்க்கிங் வசதி
நிலக்கல்லில் பத்தாயிரம் வாகனங்கள் நிறுத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 7500 வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதி தான் ஏற்படுத்தப்பட்டிருந்தது. நிலக்கல்லில் 145 டாய்லெட்டுகள், பம்பையில் 580 டாய்லெட்டுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன." என்றார்.