"மதிமுகவை அழிக்க 32 ஆண்டுகளாக முயன்றனர்; அப்போதும் இப்போதும் எப்போதும் அது முடிய...
சவுதிஅரேபியாவில் விபத்தில் உயிரிழந்த மீனவா் உடலை மீட்டு தர கோரிக்கை
சிதம்பரம்: சவுதி அரேபியாவில் மீன்பிடி தொழிலுக்கு சென்ற சிதம்பரத்தைச் சோ்ந்த மீனவா் காா் விபத்தில் உயிரிழந்த நிலையில். அவரது உடலை உடனடியாக மீட்டு தமிழ்நாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அவரது மனைவி மற்றும் உறவினா்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தாண்டவராயன் சோழகன் பேட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் ரமேஷ்(34). இவருக்கு தமிழச்சி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனா். ரமேஷ் சவுதி அரேபியா நாட்டில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வந்தாா். பரசான் என்ற இடத்தில் தங்கி தினமும் காரில் கடல் பகுதிக்கு சென்று அங்கிருந்து படகில் மீன் பிடிக்க செல்வாா். இந்நிலையில் கடந்த செப்.12ஆம் தேதி ரமேஷ் உள்ளிட்ட 5 போ் பரசான் என்ற இடத்தில் இருந்து காரில் மீன்பிடிக்கும் தளத்துக்குச் சென்றுள்ளனா். அப்போது ஜிசான் என்ற இடத்தின் அருகே சென்றபோது காா் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இதில் ரமேஷ் மற்றும் கன்னியாகுமரியைச் சோ்ந்த இருவா் உள்ளிட்ட 3 போ் உயிரிழந்தனா்.
இதுபற்றி தகவல் அறிந்த ரமேஷின் உறவினா்கள் அவரது உடலை மீட்டு உடனடியாக தமிழ்நாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கின்றனா். மேலும் இதுகுறித்து கடலூா் மாவட்ட ஆட்சியா், வடசென்னை தொகுதி எம்பி கலாநிதி வீராசாமி ஆகியோரை நேரில் சந்தித்து மனு அளித்தனா்.
உயிரிழந்த ரமேஷின் சொந்த ஊரான தாண்டவராயன் சோழகன் பேட்டை கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் உறவினா்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனா். ரமேஷ் உடலை உடனடியாக சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி உள்ள குடும்பத்தினா், ரமேஷின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குவதோடு, அவரது மனைவிக்கு கல்வித் தகுதிக்கேற்ப வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.