சஸ்பென்ஸ் வைக்கும் எடப்பாடி... TVK - ADMK இடையே என்ன நடக்கிறது?
தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடக்கிறதா.. த.வெ.க-வை கூட்டணிக்குள் கொண்டுவர பா.ஜ.க-வை வெளியேற்றுவீர்களா.. போன்ற கேள்விகளுக்கு உரிய பதிலைச் சொல்லாமல் சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனி்சாமி. த.வெ.க-வை வைத்து புது வியூகத்துக்கு ப்ளான் போடுகிறதா அ.தி.மு.க என்ற பேச்சும் கிளம்பியிருக்கிறது. இதுகுறித்து களமிறங்கி விசாரித்தோம்.

'கூட்டணி ஆட்சி' விவகாரத்தால் புகையத் தொடங்கியிருக்கிறது அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி, 'கூட்டணி ஆட்சி' அமைப்போம் என அமித் ஷா பற்றவைக்க, `எங்கள் கூட்டணி ஆட்சியமைக்கும் ஆனால், அ.தி.மு.க தனித்த ஆட்சி அமைக்கும்' என திட்டவட்டமாக மறுத்தார் எடப்பாடி பழனிசாமி. 'மீண்டும் மீண்டும் கூட்டணி ஆட்சி' என பா.ஜ.க சீண்டவே, ஒருகட்டத்தில் கொத்தித்துப்போன அவர் `நாங்கள்தான் கூட்டணிக்குத் தலைமை. கூட்டணி ஆட்சி இல்லையென சொல்லிவிட்டோமே' என ஒரே போடாக போட்டப் பிறகும் பா.ஜ.க 'கூட்டணி ஆட்சி' முழக்கத்தை நிறுத்தியபாடில்லை. இந்தப் பரபரப்பான சூழலில் த.வெ.க-வை கூட்டணிக்குள் கொண்டுவர பா.ஜ.க-வை வெளியேற்றுவீர்களா..? என்ற கேள்விக்கு சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார் எடப்பாடி!
நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர்கள் சிலர் ``த.வெ.க-வை கூட்டணிக்குள் கொண்டுவர பா.ஜ.க-வை வெளியேற்றுவீர்களா..? என்ற கேள்விக்கு குறைந்தபட்சம், கூட்டணி வலுவாக இருக்கிறது.. தி.மு.க-வை வீழ்த்தும் நோக்கில் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்றிருக்க வேண்டும். ஆனால் வெறுமனே 'உங்கள் யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது.. ' என மேலோட்டமாக பதில் சொல்லியிருப்பதில் பல்வேறு அர்த்தங்கள் பொதிந்திருக்கலாம். கூட்டணி ஆட்சி என பா.ஜ.க நெருக்குவதால், கூட்டணியை மறுசீரமைக்கும் பிளான் 'பி' பற்றி அ.தி.மு.க யோசிக்கலாம். 11 ஆண்டுகால மத்திய ஆட்சி மீதான அதிருப்திகளை சுமப்பதற்கு பதில், பா.ஜ.க-வை வெறுக்கும் த.வெ.க, வி.சி.க ஆகிய கட்சிகளுக்கு அ.தி.மு.க வலை வீசவும் எடப்பாடி பழனிசாமியிடம் திட்டம் இருக்கலாம்" என்றனர்

நம்மிடம் பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஒருவர் "கடந்த ஏப்ரல் 9-ம் தேதி பா.ஜ.க-வுடனான கூட்டணியை உறுதி செய்தது அ.தி.மு.க. அதற்கு முன்பு நாங்கள் த.வெ.க-வுடன் தீவிர கூட்டணிப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்தது உண்மைதான். 'கூட்டணி ஆட்சி' விவகாரங்களை தேர்தலுக்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம், ஏறக்குறைய 35-40 தொகுதிகள்வரை த.வெ.க-வுக்கு தர எங்கள் பொதுச் செயலாளர் சம்மதம் தெரிவித்திருந்தார். ஆனால், த.வெ.க-வின் கோரிக்கைகளில் அரசியல் அறியாமையே தென்பட்டன. எடுத்த எடுப்பிலேயே ஆட்சி அதிகாரத்தில் பங்கு.. பாதிக்கு பாதி தொகுதி.. முதலமைச்சராக சிறிது காலம் விஜய் இருக்கலாமா.. என்றெல்லாம் கோரிக்கைகளை வீசினார்கள். இதனால் டென்ஷனான எடப்பாடி பேச்சுவார்த்தைகளை அத்துடன் முடித்துக் கொள்ளச் சொன்னார். பின்னர் பா.ஜ.க-வுடன் கூட்டணியை உறுதிப்படுத்திவிட்ட இச்சூழலில் பா.ஜ.க இல்லையென்றால் எங்களுடன் இணைய விருப்பம் தெரிவிக்கின்னர். ஆனால், முடிவை காலமும், எடப்பாடியாரும்தான் எடுக்க வேண்டும்" என்றார்.
த.வெ.க செய்தி தொடர்பாளர்களோ ``விவாதங்களிலும், பேட்டிகளிலும் அ.தி.மு.க-வை விமர்சிக்கவே கூடாது என கறார் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அண்மையில் லாக் அப் மரணங்களைக் கண்டித்து த.வெ.க நடத்திய ஆர்ப்பாட்டத்தில்கூட, அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் லாக்-அப் மரணங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டாம் என்றுவிட்டனர். அதிலும் குறிப்பாக, 'தி.மு.க-வுடனும் பா.ஜ.க-வுடன் கூட்டணியில்லை எனலாம் ஆனால `அ.தி.மு.க-வுடன் கூட்டணி இல்லை' எனச் சொல்லவும் அனுமதியில்லை. த.வெ.க தலைவர் விஜய்யும் அ.தி.மு.க-வை ஓரிடத்தில்கூட விமர்சிக்கவில்லை. இவையெல்லாம் பா.ஜ.க அல்லாத அ.தி.மு.க கூட்டணியை எங்கள் தலைமை விரும்புவதற்காக அறிகுறிகள்தான். த.வெ.க-வின் சுற்றுப்பயணத்துக்குக் கிடைக்கும் எழுச்சியை கண்டு அ.தி.மு.க நம்மை அணுகும் என நம்புகிறது கட்சித் தலைமை" என்றனர்.

'பா.ஜ.க-வை கடைசி நிமிடத்தில் கழற்றிவிட்டு த.வெ.க கூட்டணிக்கு எடப்பாடி கொண்டு வருவார் என்பது நடக்கும் காரியமல்ல' என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக இருந்தாலும் `அரசியலில் எதுவும் நடக்கலாமே!' என எதிர்ப்பார்க்கிறது த.வெ.க!
பார்ப்போம்!