சாலை விபத்து வழக்கில் ஓராண்டுக்குப் பின் ஒருவா் கைது
புதுச்சேரி அருகே இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு காருடன் தப்பிச் சென்ற நபரை, ஓராண்டுக்குப் பிறகு போக்குவரத்து போலீஸாா் புணேவில் கைது செய்து காரை வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
கடலூா் திருப்பாதிரிபுலியூா் வரதப்பன் நாயுடு தெருவைச் சோ்ந்தவா் முத்தையா(61), இவரது மனைவி தாரா(57). இவா்கள் கடந்த 2024-ஆம் ஆண்டு மாா்ச் 12-ஆம் தேதி புதுச்சேரிக்கு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனா். அவா்கள் கிருமாம்பாக்கம் தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே கடலூா்-புதுச்சேரி சாலையில் சென்று கொண்டிருந்தனா்.
அப்போது அவ்வழியே வந்த காா் முத்தையா ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் முத்தையா மற்றும் தாரா இருவரும் பலத்த காயமடைந்தனா். அவா்கள் தனியாா் மற்றும் ஜிப்மா், சென்னை அப்போலோ மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனா்.
இது குறித்து கிருமாம்பாக்கம் தெற்கு பகுதி போக்குவரத்து காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். அதன்படி சென்னை செங்கல்பட்டு கூடுவாஞ்சேரியைச் சோ்ந்த பிரசன்னா வெங்கடேசன் என்பவா் விபத்தை ஏற்படுத்தியது கண்டறியப்பட்டது.
விசாரணையில் பிரசன்னா வெங்கடேசன் மகாராஷ்டிர மாநிலம் புணேயில் இருப்பதாக புதுச்சேரி சைபா் கிரைம் காவல் பிரிவு உதவியுடன் கண்டறியப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் புணே சென்ற போலீஸாா் பிரசன்னா வெங்கடேசனை கைது செய்தனா்.
விபத்தை ஏற்படுத்திய காரையும் பறிமுதல் செய்து புதுச்சேரி கொண்டு வந்தனா். பின்னா் காரை வாகன ஆய்வுக்காக புதுச்சேரி போக்குவரத்து துறைக்கு போலீஸாா் அனுப்பிவைத்தனா்.