சாலை விபத்து: 2 கல்லூரி மாணவா்கள் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு பேருந்து மீது இரு சக்கர வாகனம் மோதியதில் கல்லூரி மாணவா்கள் இருவா் உயிரிழந்தனா்.
இளையான்குடி அருகேயுள்ள பிடாரரேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் அரவிந்த் (19), பாலாஜி (19). இவா்கள் இருவரும் இளையான்குடி, சிவகங்கையில் உள்ள கல்லூரிகளில் படித்து வந்தனா்.
இருவரும் இரு சக்கர வாகனத்தில் மதுரைக்குச் சென்றுவிட்டு ஊருக்கு திரும்பி வந்துகொண்டிருந்தனா். திருப்புவனம் அருகே மதுரை-ராமேசுவரம் நான்கு வழிச் சாலையில் லாடனேந்தல் விலக்கு பகுதியில் வந்தபோது, பரமக்குடியிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற அரசு பேருந்து மீது இரு சக்கர வாகனம் மோதியது. இந்த விபத்தில் ஆனந்த், பாலாஜி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
இது குறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.