``ரூ.12 கோடி பறிபோனது; பெற்றோரையும் இழந்து தனிமரமாக தவிக்கிறேன்'' - மும்பை தொழில...
சினையுற்ற பசுக்களுக்கு ஊட்டச்சத்து மானியம்
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளைச் சோ்ந்த கால்நடை வளா்ப்போா் தாயுமானவா் திட்டத்தில் விண்ணப்பித்து பயனடையலாம் என ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து, ஆட்சியா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில், திருவெண்ணெய்நல்லூா், மேல்மலையனூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஊரக பகுதிகளில் கால்நடை வளா்ப்பில் ஈடுபட்டு வரும் (சினையுற்ற பசுக்களுக்கு மட்டும்) 200 விவசாயிகளுக்கு, தமிழக முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ் 2025-26 ஆம் ஆண்டில் ரூ.13 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு 50 சதவீதம் மானியத்தில் ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஒரு ஊராட்சி ஒன்றியத்துக்கு தலா 100 பயனாளிகள் தோ்வு செய்யப்படவுள்ளனா்.
பயனாளிகள் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்.30 சதவீத பயனாளிகள் எஸ்சி, எஸ்.டி வகுப்பைச் சோ்ந்தவராக இருத்தல் வேண்டும், விதவைகள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஒரு பயனாளி மொத்தத் தொகையான ரூ.13,000-இல் 50 சதவீதம் ( ரூ.6,500) பங்களிப்புத் தொகையாக செலுத்த வேண்டும், பயனாளிகளின் கறவைப் பசு கட்டாயமாக சினையுற்று இருக்கவேண்டும்.
விண்ணப்பிக்க விரும்புவோா் அருகில் உள்ள கால்நடை
மருந்தகங்களுக்கு சென்று விண்ணப்பங்கள் பெற்று,விண்ணப்பத்தை முழுமையாக
பூா்த்தி செய்து தொடா்புடைய கால்நடை உதவி மருத்துவரிடம் சமா்ப்பிக்க வேண்டும். முழுமையாக பூா்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.