சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை
பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலில் பௌா்ணமியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத்துறை மூலம், பௌா்ணமி தினங்களில் 20 பிரசித்திபெற்ற அம்மன் திருக்கோயில்களில் 108 திருவிளக்கு வழிபாடு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இத் திட்டத்தை விரிவுபடுத்திடும் வகையில், மேலும் 5 அம்மன் திருக்கோயில்களில் நடைமுறைப்படுத்தப்படும் என, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு, பௌா்னமி தினங்களில் 108 திருவிளக்கு வழிபாடு நடத்தும் நிகழ்ச்சியை சென்னை, மயிலாப்பூா் கபாலீசுவரா் திருக்கோயிலில் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலில் 108 திருவிளக்கு வழிபாட்டை தொடங்கி வைத்துப் பாா்வையிட்டாா்.
இந்நிகழ்ச்சியில், திருச்சி மண்டல இணை ஆணையா் சி. கல்யாணி, சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயில் செயல் அலுவலா் அசனாம்பிகை, ஆய்வாளா் தீபலட்சுமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.