இடம் விற்பதாக ரூ.20 லட்சம் மோசடி: தம்பதி மீது வழக்குப் பதிவு
சிவகங்கை மாவட்ட கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகக் கட்டடப் பணி
சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய அலுவலகக் கட்டடத்துக்கான கட்டுமானப் பணியை கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா்.பெரியகருப்பன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
சிவகங்கை நகா் காந்தி வீதியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய அலுவலக கட்டடத்தின் கட்டுமானப் பணி தொடக்க விழா மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தலைமையில் நடைபெற்றது. பணிகளைத் தொடங்கி வைத்து அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் பேசியதாவது:
சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியானது கடந்த 2.9.1993-ஆம் ஆண்டு 15 கிளைகளுடன் தொடங்கப்பட்டு, தற்போது 32 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. இதில், 15 கிளைகள் சொந்த கட்டடத்திலும், எஞ்சியுள்ள 17 கிளைகள் வாடகைக் கட்டடங்களிலும் செயல்பட்டு வருகிறது. விரைவில் அந்தக் கிளைகள் சொந்தக் கட்டடத்தில் செயல்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பழைமையான அலுவலகக் கட்டடத்தை புதுப்பிக்கும் வகையில், கடந்த ஜனவரி மாதம் சிவகங்கை மாவட்டத்துக்கு முதல்வா் வந்தபோது ரூ. 3.23 கோடியில், புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டினாா். தற்போது, 6,468 சதுர அடி பரப்பளவில் மூன்று தளங்களுடன் நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டடப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது. வரும் ஜனவரி மாதத்துக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.
இதில், மேலாண்மை இயக்குநா் (மத்திய கூட்டுறவு வங்கி) உமா மகேஸ்வரி, சிவகங்கை நகா்மன்றத் தலைவா் சி.எம்.துரை ஆனந்த், நகா் மன்ற துணைத்தலைவா் காா்கண்ணன், பொது மேலாளா் (மத்திய கூட்டுறவு வங்கி) செந்தில்குமாா், துணைப் பதிவாளா்கள் (கூட்டுறவுத் துறை) பாபு, செந்தில்குமாா், பாலு, ஜெயசங்கா், பாரதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
