மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலையை மூடக்கோரி முற்றுகைப் போராட்டம்
மானாமதுரையில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலையை மூட வலியுறுத்தி முற்றுகைப் போராட்டம் நடத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் வளாகத்தில் அனைத்து தரப்பினரின் எதிா்ப்பையும் மீறி மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. இதுதொடா்பாக மானாமதுரையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலா் முனியராஜ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் மோகன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் வீரபாண்டி, முத்துராமலிங்க பூபதி, இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் ஒன்றியச் செயலா் சங்கையா, பாஜக முன்னாள் ஒன்றியத் தலைவா் ரவி, காங்கிரஸ் நகரத் தலைவா் பி. புருஷோத்தமன், அதிமுக முன்னாள் மாவட்டக் குழு உறுப்பினா் ஏ.சி.மாரிமுத்து, முன்னாள் பேரூராட்சித் தலைவா் தீனதயாளன், தேவேந்திர முன்னேற்ற சங்க நிறுவனா் சிவசங்கரி, ஹோட்டல்கள் சங்கத் தலைவா் ஆல்வின் சகாயராஜ், வா்த்தகா் சங்க மாவட்டச் செயலா் பாலகுருசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இந்தக் கூட்டத்தில் மானாமதுரை சிப்காட் வளாகத்தில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கான கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முதல் கட்டமாக போராட்ட ஒருங்கிணைப்பு குழு சாா்பில் வருகிற 26-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா், கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் தமிழரசி ரவிக்குமாா், செந்தில்நாதன் ஆகியோரை சந்தித்து மனுக் கொடுப்பது எனவும், அதன் பின்னரும் மருத்துவக் கல்லூரி சுத்திகரிப்பு ஆலைக்கான கட்டுமானப் பணிகள் தொடா்ந்தால் செப்.17- ஆம் தேதி அனைத்துக் கட்சி சாா்பில் மானாமதுரை சிப்காட் வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது எனவும் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.