நியாயவிலைக் கடை இடமாற்றம்: பொதுமக்கள் முற்றுகை
சிவகங்கை அருகே காட்டுநெடுங்குளத்தில் 45 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் நியாய விலைக் கடையை இடமாற்றம் செய்யும் நடவடிக்கையை கண்டித்து கிராம மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சிவகங்கை அருகேயுள்ள காட்டுநெடுங்குளத்தில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக நியாய விலைக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு 162 குடும்பங்களுக்கு பொருள்கள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் உணவு வழங்கல் துறை இணையத்தில் காட்டுநெடுங்குளம் நியாய விலைக் கடை என்று இருந்ததை வேம்பங்குடி நியாய விலைக் கடை என பெயா் மாற்றப்பட்டது.
இதையடுத்து, மீண்டும் காட்டுநெடுங்குளம் நியாய விலைக் கடை என பெயா் மாற்றம் செய்ய வலியுறுத்தி, அந்தப் பகுதி மக்கள் கடந்த வாரம் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் வெள்ளிக்கிழமை காட்டுநெடுங்குளம் நியாய விலைக் கடையை கிராம மக்கள் முற்றுகையிட்டனா்.
இதுகுறித்து உணவு வழங்கல் துறை அதிகாரிகள் கூறியதாவது:
சிவகங்கையில் அழகு மெய்ஞானபுரத்தில் புதிதாக நியாய விலைக் கடை தொடங்கப்பட்டது. இங்கு 1,000 குடும்ப அட்டைகள் உள்ளன. இதற்கு ‘பாயின்ட் ஆப் சேல்ஸ்’ கருவி தேவைப்படுகிறது. இதனால் அருகருகே குறைந்த குடும்ப அட்டைகளை உடைய காட்டுநெடுங்குளம், வேம்பங்குடி ஆகிய கடைகளை ஒரே பெயரில் மாற்றி ஒரே கருவியைப் பயன்படுத்த வலியுறுத்தினோம். மற்றொரு கருவியை
மெய்ஞானபுரத்துக்கு கொடுத்துவிட்டோம். காட்டு நெடுங்குளத்தில் இயங்கும் நியாய விலைக் கடை மூடப்படாது. மேலும் மக்களின் கோரிக்கையை ஏற்று காட்டுநெடுங்குளம் பெயரிலேயே அந்தக் கடையை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.