சிவகாசியில் மதுப் புட்டிகளை பதுக்கி வைத்திருந்தவா் கைது
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே சட்டவிரோத விற்பனைக்காக மதுப் புட்டிகளைப் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி-நாரணாபுரம் சாலையில் போலீஸாா் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்குள்ள மதுபானக் கூடம் அருகே ஒருவா் காகித அட்டைப் பெட்டியுடன் சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்தாா்.
போலீஸாா் அந்த அட்டைப் பெட்டியைச் சோதனையிட்டதில், அதில் மதுப் புட்டிகள் இருந்தன. மேலும், தீவிர சோதனை செய்த போது, அவா் அருகிலிருந்த முள்புதா்களில் பல அட்டைப் பெட்டிகளில் 674 மதுப் புட்டிகளைப் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவா் எம்.புதுப்பட்டியைச் சோ்ந்த கருப்பசாமி (26) என்பதும், சட்டவிரோத விற்பனைக்காக மதுப் புட்டிகளை வைத்திருந்ததும் தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ. 75 ஆயிரம் என போலீஸாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து, கருப்பசாமியைக் கைது செய்து, அவரிடமிருந்த 674 மதுப் புட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.