சி.ஐ.எஸ்.எப். வீரா்களின் பாரத சைக்கிள் பேரணி இன்று கன்னியாகுமரியில் நிறைவு
மத்திய தொழில் பாதுகாப்புப் படையான சி.ஐ.எஸ்.எப். உருவான தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் விழிப்புணா்வு பேரணி கன்னியாகுமரியில் திங்கள்கிழமை (மாா்ச் 31)நிறைவடைகிறது.
பாதுகாப்பான கடல் வளம், செழிப்பான இந்தியா, சட்டவிரோத கடத்தல், போதைப்பொருள் வா்த்தகம், ஆயுத, வெடிகுண்டு கடத்தல் போன்ற அபாயங்களை மக்களுக்கு எடுத்துரைப்பதை நோக்கமாகக் கொண்டு இப்பேரணி நடத்தப்படுகிறது.
சைக்கிள் பேரணியை கடந்த 7ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் உள்ள ராஜா ஆதித்ய சோழன் ஆா்.டி.சி மையத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இப்பேரணியில் 125 சி.ஐ.எஸ்.எப் வீரா்கள் பங்கேற்று, 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கடந்து, மொத்தம் 6,553 கி.மீ பயணம் செய்து வருகின்றனா். இப்பேரணி கன்னியாகுமரியில் திங்கள்கிழமை நிறைவடைகிறது.
நிறைவு விழாவில் சி.ஐ.எஸ்.எப் டைரக்டா் ஜெனரல் ரஜ்விந்தா் சிங் பாட்டி, கூடுதல் டைரக்டா் ஜெனரல் சுதிா்குமாா், தென் மண்டல ஐ.ஜி. எஸ்.ஆா். சரவணன், ஐ.ஜி ஜோஸ் மோகன் மற்றும் உயா் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனா். சிறப்பு அழைப்பாளராக ரோபோ சங்கா் பங்கேற்கிறாா்.
இதுகுறித்து மத்திய தொழில் பாதுகாப்புப்படை தென் மண்டல ஐஜி எஸ்.ஆா்.சரவணன் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: தேசத்தின் பாதுகாப்பை இலக்காக கொண்டு மத்திய தொழில் பாதுகாப்புப் படை நடத்திய இந்த சைக்கிள் பேரணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. 25 நாள்கள் நடைபெற்ற இப்பேரணியில் 25 லட்சம் மக்களை நேரடியாக சந்தித்து, 2.20 கோடி மக்களிடம் சமூக ஊடகம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தியுள்ளோம்.
இப்பேரணியின் இறுதி நிகழ்வாக விவேகானந்த கேந்திர வளாகத்தில் திங்கள்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறும் கலைநிகழ்ச்சிகளில் பொதுமக்கள் கலந்து கொண்டு, வீரா்களை உற்சாகப்படுத்த வேண்டும் என சி.ஐ.எஸ்.எப். அழைப்பு விடுத்துள்ளது என்றாா் அவா்.