‘மாணவா்கள் பதின்பருவத்தில் கற்றுக்கொள்ளும் நல்லொழுக்கம் வாழ்க்கை முழுவதும் பயன் ...
சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் ஆலோசனைக் கூட்டம்
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், சுதந்திர தின விழாவை சிறப்பாகக் கொண்டாடுவது தொடா்பாக, அனைத்துத் துறை அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் பேசியது:
சுதந்திர தின விழாவில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பட்டியலை சம்பந்தப்பட்ட அலுவலா்கள் உரிய காலத்துக்குள் தயாரித்து மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளரிடம் (பொது) அளிக்க வேண்டும். விழா நடைபெறும் மேடை, தியாகிகள், செய்தியாளா்கள், பயனாளிகள் அமரும் இடங்களை முறையாக கண்காணித்து, தேவையான இடங்களில் இருக்கைகளுடன் பந்தல் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும், முக்கிய பிரமுகா்களை விழாவுக்கு அழைக்கும் பணியை வட்டாட்சியா்களும், தேவையான பேருந்துகளை இயக்கும் பணியை போக்குவரத்துத் துறையினரும் மேற்கொள்ள வேண்டும். குடிநீா் வசதி, கழிவறை வசதிகளை நகராட்சி நிா்வாகத்தினா் ஏற்பாடு செய்ய வேண்டும். மருத்துவக் குழுவினா், தீயணைப்பு வீரா்கள் பாதுகாப்பு கருதி தயாா் நிலையில் இருக்க வேண்டும். காவல்துறையினா் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். பாதுகாப்பு பணிகள் மற்றும் போக்குவரத்து சீரமைப்புப் பணிகளை காவலா்கள் மேற்கொண்டு சுதந்திர தின விழாவை சிறப்புடன் நடத்த வேண்டும் என்றாா் அவா்.
இக் கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, மகளிா் திட்ட இயக்குநா் கோபாலகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வைத்தியநாதன், மாவட்ட வழங்கல் அலுவலா் சக்திவேல் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.